திருப்பரங்குன்றம் திருக்கோயில் ஸ்தானீகர்களை அச்சுறுத்துவதை தவெக அரசு கைவிட வேண்டும் – தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!!

சென்னை:
திருப்பரங்குன்றம் திருக்கோயில் ஸ்தானீகர்களை அச்சுறுத்துவதை தவெக அரசு கைவிட வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் ஸ்தானீகர்களை அச்சுறுத்துவதையும் தேவையின்றி தொந்தரவு செய்வதையும் அமைச்சர்கள் ரமேஷ் மற்றும் நிர்மல்குமார் கைவிட வேண்டும்.

திருப்பரங்குன்ற மலையில் உள்ள தீபத்தூணில் தீபமேற்றும் விவகாரத்தில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை தவெக அரசு வேண்டுமென்றே மீறியுள்ளது என்பது சந்தேகத்துக்கிடமின்றி நிரூபணமாகியுள்ள நிலையில், தனது தவறை மறைக்க, அறங்காவலர்கள் மீது பழியைச் சுமத்துவதோடு, ஸ்தானீகர்களின் பெயர்களையும் தேவையின்றி இவ்விவகாரத்தில் இழுத்திருக்கிறது முதல்வர் ஜோசப் விஜய் அரசு.

வரம்பை மீறிச் செயல்பட்ட இந்த இந்து விரோத தவெக அரசு தங்களைக் காப்பாற்றிக்கொள்ளும் நோக்கில் ஸ்தானீகர்களுக்கு அழுத்தம் கொடுத்துக் கடிதங்களைப் பெற்றதாகத் தகவல்கள் வருகின்றன. இது உண்மையெனில், வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

இப்படித் தொடர்ந்து, இந்துக்களின் உரிமைகளை முடக்குவதில் காட்டும் வேகத்தில் ஒரு துளியாவது சட்டம் ஒழுங்கில் தவெக அரசு காட்டியிருந்தால், இந்நேரம் பெண் ஆட்சியரிடம் முறை தவறி நடந்து கொண்ட தவெக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் கைது செய்யப்பட்டிருப்பார்.

இனியாவது, இந்து விரோதத்துடன் தான் இழைக்கும் தவறுக்கு, அடுத்தவர்களை மிரட்டிப் பலிகடாவாக்கும் அற்பச் செயலைச் செய்வதை விடுத்து, முதல்வர் விஜய் தலைமையிலான அரசு தங்களது நிர்வாகத்தில் நடக்கும் தவறுகளைக் களைய முற்பட வேண்டும் என வலியுறுத்துகிறேன்” என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *