காஞ்சீபுரம்,
காஞ்சீபுரம் குமரக்கோட்டம் முருகன் கோவிலில் நாளை மறுநாள் கும்பாபிஷேகம் நடக்கிறது. இதையொட்டி யாகசாலை பூஜை தொடங்கியது.
காஞ்சீபுரத்தில் மண் தலமாக விளங்கும் ஏகாம்பரநாதர் கோவிலுக்கும் சக்தி பீட தலமாக விளங்கும் காமாட்சியம்மன் கோவிலுக்கும் இடையே மேற்கு ராஜ வீதி பகுதியில் அமைந்துள்ளது குமரக்கோட்டம் முருகன் கோவில்.
கந்தபுராணம் அரங்கேறிய திருத்தலம் என்ற சிறப்பு பெற்ற இந்த கோவிலில் கடந்த 2008-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்ற நிலையில் 18 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு கும்பாபிஷேகம் நடத்த தீர்மானிக்கப்பட்டு அதற்கான திருப்பணிகள் நடைபெற்றன.
பல லட்சம் ரூபாய் செலவில் கோவில் முழுவதும் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.கோவிலில் உள்ள சன்னதிகள் பழமை மாறாமல் புனரமைக்கப்பட்டுள்ளது.
தண்டாயுதபாணி சுவாமி சன்னதி முழுவதும் புனரமைக்கப்பட்டு தங்க முலாம் பூசிய தகடுகள் பதிக்கப்பட்டு பொலிவுடன் காட்சி அளிக்கிறது. கந்தபுராணம் அரங்கேறிய மண்டபத்தின் 8 தூண்களுக்கும் தங்க முலாம் பூசிய தகடுகள் பதிக்கப்பட்டுள்ளன.
மூலவரின் கருவறை சன்னதி நுழைவு வாயில் பகுதியில் அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய வெள்ளித்தகடுகள் முலாம் பூசப்பட்டு புதுப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் உற்சவ காலங்களில் திருவீதி உலா செல்ல முருகப்பெருமானுக்கு வெள்ளி மயில் வாகனமும் உபயதாரரால் வழங்கப்பட்டுள்ளது.
திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டுள்ள நிலையில், நாளை மறுநாள் (29-ந்தேதி) அதிகாலை 4 மணி முதல் 5.30 மணிக்குள்ளாக கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
கும்பாபிஷேக விழாவையொட்டி கோவில் வளாகத்தில் மூலவருக்கென தனி யாகசாலையும் பரிவார மூர்த்திகளுக்கென 20 யாக சாலைகளும் அமைக்கப்பட்டுள்ளன. யாகசாலை பூஜையில் 100 சிவாச்சாரியார்கள் 40 திருமுறை ஓதுவார்கள் கலந்து கொள்கின்றனர்.
விழாவையொட்டி யாகசாலை பூஜைகள் நேற்று முன்தினம் கணபதி பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், யாகசாலையில் வைத்து சிறப்பு வழிபாடு செய்ய புனித நீர் கலசங்கள் கொண்டுவரும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
பல்வேறு நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர், கலசங்களில் நிரப்பப்பட்டு, அந்த கலசங்களை காஞ்சீபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில் இருந்து சிவாச்சாரியார்களும் கும்பாபிஷேக விழா பொறுப்பாளர்களும் ஊர்வலமாக யாகசாலைக்கு கொண்டு வந்தனர். யாகசாலையில் அந்த கலசங்களை வைத்து சிறப்பு வழிபாடு செய்தனர்.