சென்னை:
அல்லிகுளம் நீதிமன்ற வளாகத்தில் வழக்கு தொடர்பாக ஏற்பட்ட தகராறில், வழக்கறிஞர்கள் இரு தரப்பினரிடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதில் பெண் ஒருவர் உட்பட 3 பேர் காயமடைந்தனர்.
நீதிமன்ற பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸார் முன்னிலையிலேயே இருதரப்பினரும் சட்டையைப் பிடித்து சரமாரியாக தாக்கிக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த 53 வயது பெண் ஒருவருக்கு அப்பகுதியில் 800 சதுர அடி நிலம் உள்ளது. கடந்த 2021-ம் ஆண்டு அந்த நிலத்தை அவரது தங்கை போலி ஆவணங்கள் தயாரித்து வேறு ஒருவருக்கு விற்பனை செய்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் பாதிக்கப்பட்ட பெண், வழக்கறிஞர் ஒருவரின் மூலம் அல்லிகுளம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால், தனது தரப்பு வழக்கறிஞர் எதிர்தரப்பினருக்கு ஆதரவாகச் செயல்பட்டதாகவும், இதனால் வழக்கில் தனக்கு பாதகமான முடிவு ஏற்பட்டதாகவும் அந்தப் பெண் குற்றம் சாட்டியுள்ளார்.
இதையடுத்து அவர் மேல்முறையீடு செய்தார். தற்போது புதிய வழக்கறிஞர்கள் இருவர் அவருக்காக ஆஜராகி வருகின்றனர். இந்நிலையில், மேல்முறையீட்டு வழக்கு நேற்று மதியம் விசாரணைக்கு வந்தது. அப்போது பெண் தனது புதிய வழக்கறிஞர்களுடன் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார்.
அங்கு ஏற்கெனவே அவருக்காக ஆஜரான வழக்கறிஞர் தனது மகன்களுடன் வந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது இருதரப்பினருக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. சிறிது நேரத்தில் அது கைகலப்பாக மாறியது.
மோதலில் ஈடுபட்ட இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் சட்டையைப் பிடித்து இழுத்து சரமாரியாகத் தாக்கிக் கொண்டனர். தடுக்க வந்த போலீஸாரையும் மீறி நீதிமன்ற வளாகத்திலேயே ஒருவரை ஒருவர் தாக்கி கீழே விழுந்து உருண்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் போலீஸார் இருதரப்பினரையும் விலக்கி மோதலை முடிவுக்குக் கொண்டு வந்தனர். மோதலில் 2 வழக்கறிஞர்கள் மற்றும் ஒரு பெண் ஆகியோர் காயம் அடைந்தனர்.
இந்த விவகாரம் தொடர்பாக பெரியமேடு போலீஸார் விசாரித்து வருகின்றனர். இதற்கிடையே நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் மோதிக் கொள்ளும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.