திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் இன்று மாலை கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும்; என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் திருப்பரங்குன்றம் முழுவதும் பாதுகாப்புக்காக 7000 போலீஸார் குவிக்கப்பட்டு 144 தடையாணை பிறப்பிக்கப் படுள்ளதால் ‘திக் திக்’ பரபரப்பில் திருப்பரங்குன்றம் !!

மதுரை:
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் இன்று மாலை கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் திருப்பரங்குன்றம் முழுவதும் பாதுகாப்புக்காக 7000 போலீஸார் குவிக்கப்பட்டு 144 தடையாணை பிறப்பிக்கப்படுள்ளதால் ‘திக் திக்’ பரபரப்பில் திருப்பரங்குன்றம் உள்ளது.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் திருக்கார்த்திகை தினமான இன்று (நவ.24) மாலை கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதற்கு எதிராக தமிழக அரசு சார்பில் சீராய்வு மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு இதுவரை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை.

உச்ச நீதிமன்றத்துக்கு இன்று விடுமுறை என்பதால் இன்றைக்கும் சீராய்வு மனு விசாரணைக்கு வரவாய்ப்பில்லை.

இதனால் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்படலாம். இருப்பினும் சீராய்வு மனு நிலுவையில் இருப்பதை கூறி அதில் முடிவு வரும் வரை தீபத்தூணில் தீபம் ஏற்றுவதை தள்ளிப்போடவும் வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.

இருப்பினும் திருப்பரங்குன்றத்தில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது. மதுரை மாநகரக் காவல் ஆணையர் ராஜேந்திரன் உத்தரவின்பேரில் திருப்பரங்குன்றம் முழுவதும் விரிவான பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மதுரை நகர், புறுநகரில் இருந்து 3 ஆயிரம் போலீஸார், வெளிமாவட்டங்களில் இருந்து 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் திருப்பங்குன்றத்தில் குவிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை ஆவடி, தாம்பரம், பூந்தமல்லி, ஊனமாஞ்சேரி, சென்னை ரயில்வே, வீரபாண்டி, தொண்டி, நாகை, கோவை, நீலகிரி, சேலம், திருச்சி, தஞ்சாவூர் பகுதிகளிலிருந்து 16 பட்டாலியன் போலீஸாரும், தெற்கு, வடக்கு, மேற்கு மாவட்டங்களில் இருந்து எஸ்பிக்கள், கூடுதல் எஸ்பிக்கள், டிஎஸ்பிக்கள், ஆய்வாளர்களும் மதுரை வந்துள்ளனர்.

திருப்பரங்குன்றம் நகர் பகுதியில் கோயில் , மலையடிவார வழிப்பாதைகள், மலையை சுற்றுப்பகுதி, மலையிலுள்ள தீபத்தூண், தர்கா போன்ற இடங்களிலும் போலீஸார் நிறுத்தப்பட்டுள்ளனர். மலைமேல் மட்டுமே 600 போலீஸார் நிறுத்தப்பட்டுள்ளனர்.

உச்சி பிள்ளையார் கோயில், தீபத்தூண், நெல்லித் தோப்பு, தர்கா மலைக்கு செல்லும் பழனி ஆண்டவர் கோயில் அடிவாரபாதை, படிக்கட்டு பாதை உள்ளிட்ட இடங்களில் ‘ஏஐ’ தொழில்நுட்ப வசதி கொண்ட சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

மதுரை மாநகர் காவல் ஆணையர் ராஜேந்திரன், துணை ஆணையர் இனிகோ திவ்யன் உள்ளிட்ட அதிகாரிகள் திருப்பரங்குன்றம் பகுதியில் முகாமிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

கோயில், மலை வழிப்பாதை உள்ளிட்ட முக்கிய இடங்களில் வெளியூர் காவல் அதிகாரிகளை பணியில் அமர்த்த உத்தரவிடப்பட்டுள்ளது.

திருப்பரங்குன்றம் முழு பகுதியும் போலீஸாரின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்நிலையில் மதுரை மாவட்டம் முழுவதும் 144 தடையாணை பிறப்பித்து மதுரை மாவட்ட ஆட்சியர் நேற்று உத்தரவிட்டார். இது பதட்டத்தை மேலும் அதிகரித்துள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவு படி தீபத்தூணில் தீபம் ஏற்றப்படுமா? இல்லையா? என்பதில் இன்னும் குழப்பம் நீடித்து வருகிறது.

இந்நிலையில் திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு வழக்கம் போல் மலைமேல் உச்சிப் பிள்ளையார் கோயில் முன்பு கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு தாமிர கொப்பரை, நெய், திரி உள்ளிட்ட பூஜை பொருட்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இன்று காலை மலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *