அரசு ஊழியர்கள் கருத்துச் சொல்லக்கூடாது எனக் கூறுவதன் மூலம் கருத்துச் சுதந்திரத்தைப் பறிக்கும் சர்வாதிகாரியாக முதல்வர் விஜய் மாறிவிட்டார் – செல்லூர் ராஜூ விமர்சனம்!!

மதுரை:
“அரசு ஊழியர்கள் கருத்துச் சொல்லக்கூடாது எனக் கூறுவதன் மூலம் கருத்துச் சுதந்திரத்தைப் பறிக்கும் சர்வாதிகாரியாக முதல்வர் விஜய் மாறிவிட்டார்,” என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ குற்றம் சாட்டியுள்ளார்.

மருது பாண்டியர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு மதுரை ஸ்காட் ரோடு பகுதியில் உள்ள மருது பாண்டியர்களின் சிலைக்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ நேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஜனநாயக நாடு, தவெகவின் தற்காலிக வெற்றியால் தற்குறி அரசாக மாறியிருக்கிறது.

நாட்டில் புதுமையை உருவாக்கப் போகிறோம், புது வளர்ச்சியை உருவாக்கப் போகிறோம், அனைவருக்கும் சுதந்திரம் என முதல்வர் விஜய் கட்சி தொடங்கும் போது கூறினார்.

மேலும், திராவிட இயக்கங்களுடைய ஆட்சியில் தமிழ்நாடு பாழாகிப் போனது எனக் கூறிய அவர், தற்போது, திராவிட இயக்கங்கள் செய்த சாதனையை தான் முன்னெடுத்து, பின்பற்றிச் செல்கிறார். 6 மாதம் ஆகிவிட்டாலும், புதுமையாக எதுவும் செய்யவில்லை.

தங்களின் கோரிக்கைகளுக்காக, அனைத்து பிரிவினரும், அரசு ஊழியர்களும் போராடி வருகின்றனர்.

இதில் தீயைக் கொளுத்தி போட்டது போல அரசு ஊழியர்கள் கருத்து சொல்லக்கூடாது என சுற்றறிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது, கருத்து சுதந்திரத்தை பறிக்கக்கூடிய சர்வாதிகாரியாக முதல்வர் விஜய் மாறிவிட்டார் என்றே நினைக்கத் தோன்றுகிறது.

விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்குப் பிரச்சினை, போதைப் பொருள் நடமாட்டம் இவற்றில் எதற்கு இந்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தொடர்ந்து பெண்களுக்கு எதிரான குற்றங்களும், குழந்தைகள் காணாமல் போவதும் அதிகரிக்கும் நிலையில், சிங்கப்பெண் படை எதற்கு அமைத்தார்கள் என்றே தெரியவில்லை.

ரோடு ஷோ, ரீல்ஸை வச்சு ஆட்சியைப் பிடித்தவர்கள் ரியல் ஆட்சியை கொண்டு வந்தால் தான் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள்.

ரீல்ஸ் மூலமாகவே ஆட்சியையும் கட்சியையும் நடத்தி விடலாம் என நினைத்தால் மக்கள் நிச்சயமாக விரைவில் சரியான பாடத்தை புகட்டுவர்.

காவிரி பிரச்சினையில் தன்னுடைய அமைச்சரவையில் அங்கம் வகிக்கின்ற காங்கிரஸ் தலைமையிடம் பேசி குறைந்தபட்சம் 15 டிஎம்சி தண்ணீராவது பெற்றிருக்க வேண்டும்.

ஆனால் அதனை கூட செய்ய முடியாத தற்குறி முதல்வராக ரீல்ஸ் போட்டுக்கொண்டு இருக்கிறார்.

சென்னையில் மழை நீர் தேங்கிக் கொண்டுதான் உள்ளது அதற்கு வருவாய் துறை அமைச்சர் இன்னும் 6 மாதம் காலம் கொடுங்கள் அதற்குள் இந்த மழைநீர் வடிகால்களை சீர்படுத்தி விடுவோம் என்கிறார்.

இந்த அரசின் இயலாமையை அமைச்சரே ஒப்புக் கொண்டு, அரசின் செயல்பாடு எப்படி உள்ளது என அவரே சொல்லிவிட்டார்” என்றார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *