வரவிருக்கும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் ஸ்டாலின் மீண்டும் முதல்வர் ஆவார் ; திராவிட மாடல் ஆட்சி தொடரும் – உதயநிதி!!

சென்னை:
“வரவிருக்கும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் ஸ்டாலின் மீண்டும் முதல்வர் ஆவார், திராவிட மாடல் ஆட்சி தொடரும்” என துணை முதல்வர் உதயநிதி தெரிவித்துள்ளார்.

திமுக இளைஞர் அணியின் வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு வரும் 14-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணிக்கு திருவண்ணாமலை கலைஞர் திடலில் நடக்கிறது.

இந்நிலையில், இது குறித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “மாநிலம் – மாவட்டம் – மாநகரம் – பேரூர் – ஒன்றியம் – கிளை – வட்டம் என்று தமிழ்நாட்டின் எல்லாத் திசைகளிலும் வேர்விட்டிருக்கிறது திமுக இளைஞர் அணி. வழக்கமான நிர்வாக அமைப்புடன் இந்த ஆண்டு இரண்டு புதிய முன்னெடுப்புகளையும் திமுக இளைஞர் அணி மேற்கொண்டிருக்கிறது.

இளைஞர் அணியின் சமூகவலைதளப் பக்கங்களை நிர்வகிப்பதற்கு என்று ஒவ்வொரு கழக மாவட்டத்திலும் சமூக வலைதளங்களுக்கான துணை அமைப்பாளர்களை நியமித்து வருகிறோம்.

ஒன்றியத்துக்கு உட்பட்ட கிளைகளிலும் நகர, பகுதி, பேரூர், வார்டுகளிலும் அனைத்து பாகங்களிலும் இளைஞர் அணிக்கு நிர்வாகிகளை நியமித்திருக்கிறோம்.

இப்படி, முதல்வரின் வழிகாட்டலில், தமிழ்நாடு முழுவதும் 5 லட்சம் இளைஞர் அணி நிர்வாகிகளைக் கொண்ட வலுவான அணியாக விளங்குகிறது திமுக இளைஞர் அணி.

இப்படி, 5 லட்சம் நிர்வாகிகள், 50 லட்சத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் என்று வலுவான கட்டமைப்பைக் கொண்டு செயல்படும் இளைஞர் அமைப்பு, இந்திய அளவில் திமுக இளைஞர் அணி மட்டுமே.

இப்படி, நியமிக்கப்பட்ட 5 லட்சம் நிர்வாகிகளை ஒன்றிணைத்து மண்டலம்தோறும் நிர்வாகிகள் சந்திப்பை நடத்த வேண்டும் என்ற முதல்வரின் உத்தரவின்பேரில், முதற்கட்டமாக வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பை 14.12.2025, ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 4 மணியளவில் திருவண்ணாமலை கலைஞர் திடலில் நடத்தவிருக்கிறோம்.

1.30 லட்சம் கழக இளைஞர் அணி நிர்வாகிகள் கூடும் பிரமாண்ட நிகழ்ச்சியாக நடக்கவிருக்கும் இந்த ‘வடக்கு மண்டல இளைஞர் அணி நிர்வாகிகள் சந்திப்’பில் கழகத் தலைவர், முதல்வர் ஸ்டாலின் சிறப்புரை ஆற்றவிருக்கிறார் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

வரவிருக்கும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் ஸ்டாலின் மீண்டும் முதல்வர் ஆவார், திராவிட மாடல் ஆட்சி தொடரும் என்னும் வெற்றிச் செய்திக்கு அடித்தளமாக இந்த ‘இளைஞர் அணி மண்டல நிர்வாகிகள் சந்திப்பு’ அமையும் என்பது உறுதி.” என்று தெரிவித்துள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *