மதுரை:
தமிழகத்தில் சிறந்த காவல் நிலையங்களில் மதுரை மாவட்டம் ஜெய்ஹிந்த்புரம் காவல் நிலையம் முதலிடம் பெற்று, அக்காவல் நிலைய ஆய்வாளர் பூமிநாதனுக்கு தமிழக முதல்வர் விருது வழங்கினார்.
தமிழக காவல்துறையில் ஆண்டுதோறும் அந்தந்த காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் முறையாக சட்டம், ஒழுங்கு பராமரித்தல், திருட்டு உள்ளிட்ட பல்வேறு குற்றங்களை தடுத்து குறைத்தல், நிலுவை வழக்குகளை விரைந்து கையாண்டு பாதிக்கப்பட்டோருக்கு நீதிமன்றம் வாயிலாக உரிய நிவாரணம் பெற்று தருதல், காவல் நிலையத்திற்கு வரும் பொதுமக்களிடம் கனிவுடன் வரவேற்று அவர்களிடம் குறைகளை கேட்டு புகார்களை பெற்று விசாரித்து போதிய நடவடிக்கை எடுத்தல், அச்சமின்றி காவல் நிலையத்தை அணுகுதல், காவல் நிலையத்தில் சுத்தம், சுகாதாரம் போன்ற பல்வேறு நடவடிக்கை யில் சிறப்பாக செயல்படும் காவல் நிலையங்கள் முறையே முதல் மூவிடம் தேர்ந்தெடுத்து குடியரசு தினவிழாவில் தமிழக முதல்வர் கையால் விருது வழங்கப்படுகிறது.
இதன்படி தமிழகளவில் கடந்தாண்டுக்கான சிறந்த காவல் நிலையமாக மதுரை மாவட்டம் ஜெய்ஹிந்த்புரம் காவல் நிலையம் முதலிடம் பிடித்தது. 2-வது இடத்தை திருப்பூர் காவல் நிலையமும், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் 3-வது இடத்தையும் பெற்றுள்ளது.
முதலிடம் பிடித்த ஜெய்ஹிந்த்புரம் காவல் நிலையத்திற்கான விருது அக்காவல் நிலைய ஆய்வாளர் பூமிநாதனுக்கு சென்னையில் நடந்த குடியரசு தினவிழாவில் முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.
இவர், ஏற்கெனவே மதுரை மாவட்டம் எஸ்.எஸ்.காலனி காவல் நிலைய ஆய்வாளராக பணிபுரிந்த போது, 2 முறை முதலிடம் பெற்று சிறந்த காவல் நிலையத்திற்கான விருதுகளை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்காக ஆய்வாளர் பூமிநாதனை காவல் ஆணையர், துணை ஆணையர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் பாராட்டினர்.
இது குறித்து ஆய்வாளர் பூமிநாதன் கூறுகையில், ”மாநகர காவல் ஆணையர் லோகநாதன், துணை ஆணையர், உதவி ஆணையர்கள் மற்றும் எங்களது காவல் நிலைய போலீஸாரின் ஒத்துழைப்பால் முதலிடம் பிடிக்க முடிந்தது.
மதுரையில் பணிபுரிந்த காலத்தில் 3-வது முறை சிறந்த காவல் நிலையத்திற்கான விருது பெற்றதில் மகிழ்ச்சி.
இவ்விருது என்னை போன்ற ஆய்வாளர்களுக்கு மேலும் ஊக்கமளித்துள்ளது.” என்று ஆய்வாளர் பூமிநாதன் கூறினார்.