அர்ஜுன் தாஸ், அன்னா பென் முதன்மை பாத்திரங்களில் நடித்த படம் ‘கான் சிட்டி’. இதில் யோகிபாபு, வடிவுக்கரசி, குழந்தை நட்சத்திரம் அகிலன் உள்பட பலர் நடித்துள்ளனர்.
பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தை அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கியுள்ளார்.
ஷான் ரோல்டன் இசை அமைத்துள்ளார். இப்படம் வெளியாகி வரவேற்பைப் பெற்று வரும் நிலையில் படக்குழுவின் நன்றி அறிவிப்பு விழா சென்னையில் நடைபெற்றது. படத்தில் பணியாற்றியவர்கள் பங்கேற்றனர்.
நடிகை வடிவுக்கரசி பேசும்போது, “நான் இன்று உங்கள் முன் நிற்பதே மறுபிறவி கிடைத்ததுபோல. எனக்கு மறுவாழ்வு கிடைக்க உதவியவர்கள், ராஜ்குமார் சேதுபதி, ஸ்ரீப்ரியா, சுஹாசினி, மணி ரத்னம், கார்த்திக், சூர்யா, ரஜினிகாந்த், கமல்ஹாசன், ஏ.சி.எஸ். சண்முகம், சரத்குமார், ராதிகா உள்ளிட்ட பலர். அவர்கள் பல லட்சம் ரூபாய் செலவு செய்து எனக்கு மீண்டும் வாழ்க்கை அளித்தார்கள்.
இன்று நான் உங்கள் முன்னால் நின்று பேசுவதற்கே அவர்கள்தான் காரணம். அந்த அன்பை வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டேன். ‘கான் சிட்டி’ திரைப்படத்தின் 25-வது நாள் வெற்றி விழாவில் இருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.
நான் திரையுலகில் நடிக்கத் தொடங்கிய காலத்தில், 25 வாரங்கள், 50 வாரங்கள், 100 நாட்கள், 175 நாட்கள் என படங்கள் ஓடி வெற்றியை கொண்டாடினார்கள்.
இன்று 25-வது நாள் விழாவாக இருந்தாலும், இந்த மகிழ்ச்சி அதே அளவுக்கு இருக்கிறது. நான் அதிகமாக யூடியூப் பார்ப்பதில்லை.
ஆனால் இந்தப் படம் வெளியான பிறகு பல விமர்சனங்களையும், ரசிகர்களின் கருத்துகளையும் பார்த்தேன். பல ஆண்டுகளுக்குப் பிறகு, ‘வடிவுக்கரசி அம்மா மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்’ என்று பலரும் எழுதியிருந்தார்கள்.
அவை மிகுந்த மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் அளித்தன. ‘வடிவுக்கரசி ரஃபாக மட்டுமே பேசுவார்’ என்ற எண்ணத்தை உடைத்து, நகைச்சுவை கதாபாத்திரம் கொடுத்து, ரசிகர்களிடம் புதிய வரவேற்பைப் பெற்றுத் தந்திருக்கிறார் இயக்குநர். அவருக்கு என் மனமார்ந்த நன்றி” என்றார்.