சென்னை:
கொளத்தூர் தொகுதியில் பயன்படுத்திய வாக்குப்பதிவு இயந்திரங்களில் 2-வது நாளாக நேற்றும் ஆய்வு செய்யப்பட்டது. இதன் மூலம் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது மக்களுக்கு நம்பகத்தன்மை அதிகரிக்கும் என மாநகராட்சி ஆணையர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவைத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபுவிடம், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 8,795 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றார்.
இந்நிலையில் இத்தொகுதியின் 14 வாக்குச்சாவடிகளில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை மறு ஆய்வு செய்ய வேண்டுமென திமுக சார்பில் தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதன்படி, சிந்தாதிரிப்பேட்டையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த கொளத்தூர் தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்களில், 2 வாக்குச்சாவடிகளில் பயன்படுத்திய இயந்திரங்கள் மாநகராட்சி ஆணையர் ஜி.எஸ்.சமீரன் முன்னிலையில் நேற்று முன்தினம் ஆய்வு செய்யப்பட்டது.
2-வது நாளாக நேற்றும் 2 வாக்குச்சாவடி இயந்திரங்களில் ஆய்வு நடத்தப்பட்டது. இது தொடர்பாக ஆணையர் ஜி.எஸ்.சமீரன் கூறியதாவது:
தேர்தல் ஆணைய உத்தரவுப்படி, கொளத்தூர் தொகுதியில் 2 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு இயந்திரங்கள், விவிபாட் இயந்திரங்களில் ஆய்வுப் பணி நடைபெற்றது.
முதலில் அதில் பதிவான வாக்குகள் சரிபார்க்கப்பட்டு திமுக வேட்பாளரின் தலைமை முகவருக்கு காண்பிக்கப்பட்டுள்ளது. பின்னர் 500-க்கும் மேற்பட்ட வாக்குகள் பதிவு செய்யப்படும் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது.
அவற்றின் எண்ணிக்கையும், யாருக்கு வாக்களித்தோம் என்பதைக் காட்டும் விவிபாட் இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணிக்கையும் சரிபார்க்கப்பட்டு 100 சதவீதம் வாக்குப்பதிவு உறுதி செய்யப்பட்டுள்ளது.
2-ம் நாளான இன்று(நேற்று) 17, 28 ஆகிய 2 வாக்குச்சாவடி இயந்திரங்களை சரிபார்க்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் பதிவான வாக்குகள் 100 சதவீதம் சரியாக இருக்கிறது. மாதிரி வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது.
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, தேர்தல் ஆணையம் ஒரு விரிவான வழிகாட்டுதல் கொடுத்துள்ளது. அதன்படி இந்த ஆய்வு நடக்கிறது.
வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது சந்தேகம் இருக்கக் கூடாது என்பதற்கும், வெளிப்படைத்தன்மையை காட்டுவதற்கும், நம்பகத்தன்மையை அதிகரிக்கவும் இந்த நடை முறை மேற்கொள்ளப்படுகிறது.
இன்னும் 4 நாட்களில் 10 வாக்குச்சாவடிகளில் பயன்படுத்திய வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஆய்வு நடத்தப்பட உள்ளது. பிற கட்சிகளின் முகவர்களும் இங்கு உள்ளனர்.
இங்கு தேர்தல் நடத்தும் அதிகாரி சார்பில் 15 பணியாளர்கள், மாவட்ட தேர்தல் அதிகாரி சார்பில் 10 பேர், இயந்திரங்களை கொண்டுவர 20 பேர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
போலீஸ் பாதுகாப்புடன் ஆய்வு நடத்தப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.