புதுடெல்லி:
உலகக் கோப்பை ஹாக்கி தொடரில் விளையாடும் இந்திய அணியின் சீருடை, நீல நிலத்திலிருந்து காவி நிறத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. இது பல்வேறு சர்ச்சைகளை உருவாக்கி உள்ளது.
சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு நடத்தும் உலகக் கோப்பை ஹாக்கி தொடர் வரும் ஆகஸ்ட் 15 முதல் 30 வரை பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்தில் நடைபெற உள்ளது.
இந்தத் தொடரில் கலந்து கொள்ளும் இந்திய ஆடவர், மகளிர் அணிகளின் சீருடை பாரம்பரியமிக்க நீல நிறத்துக்கு பதிலாக முழுவதுமான காவிநிறத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கத்தில் இந்திய ஹாக்கி அணியின் புதிய சீருடையை ஹாக்கி இந்தியா அமைப்பு வெளியிட்டுள்ளது.
வீரர்கள் மற்றும் உதவிப் பணியாளர்களுடன் கலந்தாலோசிக்கப்பட்ட பிறகே இந்த ஆடை வடிவமைப்பு இறுதி செய்யப்பட்டுள்ளதாக ஹாக்கி இந்தியா அமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும், இந்தச் சீருடையின் வண்ணமும் வடிவமைப்பும் ஒரு கதையைக் கூறுவதோடு, இந்தியாவின் பெருமையை சுமந்து நிற்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
சீருடையில் உள்ள காவி நிறம் துணிவு, தியாகம் மற்றும் வெற்றியின் குறியீடாக அமைந்திருப்பதாகவும் ஹாக்கி இந்தியா கூறியுள்ளது.
இதுதொடர்பாக ஹாக்கி இந்தியா அளித்துள்ள விளக்கம் பின்வருமாறு:
தற்போது சர்வதேச ஹாக்கி போட்டிகளில் நீல நிறச் செயற்கை புல்வெளி மைதானங்களே பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இதனால், நமது அணியினர் நீல நிறச் சீருடை அணிந்து விளையாடும்போது, அது மைதானத்தின் நிறத்தோடு ஒன்றிப் போவது கவனிக்கப்பட்டது.
இந்த ஒரே மாதிரியான நிற அமைப்பு, போட்டிகளின் போது களத்தில் வீரர்களுக்கானப் பார்வைத் தெளிவையும், சக வீரர்களை அடையாளம் காண்பதையும் பாதித்தது.
இதனைத் தொடர்ந்து, பயிற்சியாளர்களும் வீரர்களும் மஞ்சள் அல்லது காவி போன்ற மாற்று வண்ணங்களைப் பயன்படுத்தப் பரிந்துரைத்தனர்.
இது குறித்து தீவிரமாக பரிசீலித்த பின்னரே, இறுதியில் காவி நிறம் தேர்வு செய்யப்பட்டு இறுதி செய்யப்பட்டுள்ளது.
தொழில்நுட்ப ரீதியிலான தேவையைப் பூர்த்தி செய்வது மட்டுமின்றி, நமது தேசியக் கொடியின் முக்கிய வண்ணங்களில் ஒன்றான காவி நிறம் துணிவு, தியாகம் மற்றும் தேசியப் பெருமையின் அடையாளமாகத் திகழ்வதால், இது ஆழமான முக்கியத்துவம் பெறுகிறது.
மேலும், இந்தியாவின் பண்பாட்டுப் பாரம்பரியத்தைப் போற்றும் வகையில், சீருடையில் ‘மண்டலா’ கலை பாணியிலான வடிவங்கள் இடம்பெற்றுள்ளன.
அத்துடன், இதில் பயன்படுத்தப்பட்டுள்ள அடர் நீல நிறக் கோடுகள் நாட்டின் வளர்ச்சி, அமைதி மற்றும் இலக்கை நோக்கிய கவனத்தைக் குறிக்கும் அசோகச் சக்கரத்தை மையமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.
சீருடையின் நெஞ்சுப் பகுதியில் இடம்பெற்றுள்ள வரைபடம், ‘வலிமை, ஒற்றுமை மற்றும் வேகம்’ ஆகியவற்றைக் குறிக்கும் சுதர்சனச் சக்கரத்தின் நவீன வடிவமைப்பாகும்.
மேலும், தோள்பட்டைகள் மற்றும் பக்கவாட்டுப் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள மூவர்ணக் கோடுகள் தேசியப் பெருமையை வலுப்படுத்துகின்றன.
நாட்டின் ‘மொழியியல் மற்றும் பண்பாட்டுப் பன்முகத்தன்மையைக் கொண்டாடும் வகையில்’, சீருடையின் முன்பகுதியில் ‘இந்தியா’ என்ற வார்த்தை நளினமான ‘தேவநாகரி’ எழுத்துருவில் பொறிக்கப்பட்டுள்ளது.
காவி நிறத்தை தவிர, இதே புதிய வடிவமைப்பைக் கொண்ட வெள்ளை நிற சீருடைகளும் இந்திய அணியில் இடம்பெறும். இவ்வாறு தெரிவித்துள்ளது.
இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் விரேன் ரஸ்கின்ஹா தனது எக்ஸ் பதிவில், “இந்திய ஹாக்கி நிர்வாகம் நாட்டிற்காக பல நல்ல காரியங்களைச் செய்துள்ளது என்பதை நான் ஒப்புக்கொண்டே ஆக வேண்டும்.
ஆனால், தற்போதது இந்த சீருடை நிற மாற்ற நடவடிக்கை உண்மையிலேயே சங்கடத்தை ஏற்படுத்துகிறது.
இந்திய அணியின் பாரம்பரியமும் அடையாளமும் எப்போதும் ‘நீல நிறம்’ தான்.
பல ஆண்டுகளாக அந்த நீல நிறச் சீருடையை நான் மிகுந்த பெருமையுடன் அணிந்து விளையாடியிருக்கிறேன்.
ரசிகர்கள் நமது இந்திய அணியை நீல நிறத்திலேயே பார்க்க விரும்புகிறார்கள். இதில் காவி நிறத்தைக் கொண்டு வந்ததன் தர்க்கம் என்னவென்று புரியவில்லை?” எனத் தெரிவித்துள்ளார்.