கிராமப்புற மக்களின் வேலை வாய்ப்பையும் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்தும் நோக்கில் ‘வெற்றி 150’ என்ற புதிய கூடுதல் வேலை வாய்ப்பு உறுதித் திட்டம் !!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில், கிராமப்புற மக்களின் வேலைவாய்ப்பையும் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்தும் நோக்கில் ‘வெற்றி 150’ என்ற புதிய கூடுதல் வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மத்திய அரசால் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ‘வளர்ச்சியடைந்த பாரதம்-கிராம வேலை உறுதி மற்றும் வாழ்வாதாரத் திட்டம்’ மூலமாக தமிழ்நாடு அரசுக்குக் கூடுதல் நிதிச் சுமை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

40% நிதிச் சுமை:


புதிய நிதிப் பங்கீட்டு முறையின்படி, மொத்த திட்ட நிதியில் இதுவரை இல்லாத அளவாக 40 சதவீத நிதியை மாநில அரசே ஏற்க வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது.

இந்த நிதிப் பங்கீட்டு முறையை மறுபரிசீலனை செய்யுமாறு தமிழ்நாடு அரசு ஒன்றிய அரசிடம் வலியுறுத்தியுள்ளது.

மாநில அரசின் பங்களிப்பு (ரூ.5,057 கோடி):

நிதிச் சுமை இருப்பினும், ஏழை மக்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு, மாநில அரசின் வரலாறு காணாத பங்களிப்பான ரூ.5,057 கோடியுடன் சேர்த்து, மொத்தம் ரூ.12,642 கோடி நிதி ஒதுக்கீட்டில் இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

150 நாட்கள் வேலை உறுதி:

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ஏற்கனவே 100 நாட்கள் (அல்லது 125 நாட்கள்) பணி முடித்த குடும்பங்களுக்கு, கூடுதலாக 25 நாட்கள் வேலை வழங்கப்பட்டு, மொத்த வேலைநாட்கள் 150 நாட்களாக உயர்த்தப்படுகிறது.

இப்புதிய ‘வெற்றி 150’ வாழ்வாதாரத் திட்டத்தைச் செயல்படுத்துவ தற்காக முதற்கட்டமாக ரூ.100 கோடி நிதியை மாநில அரசு ஒதுக்கியுள்ளது.

கிராமப் பகுதிகளில் வேலைவாய்ப்பை நம்பி இருக்கும் ஏழை, எளிய குடும்பங்கள் இதன் மூலம் நேரடிப் பயன்பெறுவர்.

அரசின் இலக்கு:

கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பின்மையைச் சீரமைக்கவும், ஏழை எளிய குடும்பங்களின் வருவாயை அதிகரிக்கவும் இத்திட்டம் பேருதவியாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் செயல்படுத்தப்படும் முறைகள் குறித்து விரைவில் ஊரக வளர்ச்சித் துறை சார்பில் அதிகாரப்பூர்வ அரசாணை வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *