சென்னை:
தவெக அரசின் முதல் பட்ஜெட்டை நிதியமைச்சர் மரிய வில்சன் நேற்று முன் தினம் பட்ஜெட் தாக்கல் செய்த நிலையில் தொடர்ந்து நேற்று வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் வினோத் தாக்கல் செய்தார்.
அதன் தொடர்ச்சியாக இன்று கூடிய அவையில் மேகதாது அணை குறித்தும், காவிரி குருவை சாகுபடி பாதிப்பு குறித்தும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி உட்பட பல உறுப்பினர்கள் கவன ஈர்ப்பு தீர்மானம் தந்தனர். அதை சபாநாயகர் பிரபாகர் ஏற்றுக்கொண்டார்.
இதன் மீது எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் உரையாற்ற, அவருக்கு முதல்வர் விஜய் பதில் அளித்தார். பின்னர் எடப்பாடி பழனிச்சாமி, சௌமியா அன்புமணி உள்ளிட்டோர் உரையாற்றினர். ஆளும் தரப்பு அமைச்சர்கள் அவர்களுக்கு பதிலளித்து பேசினர்.
இதைத்தொடர்ந்து தமிழகத்திற்கு நியாயமான வரிப்பகிர்வை மத்திய அரசு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தும் அரசினர் தனித் தீர்மானத்தை அமைச்சர் மரிய வில்சன் முன்மொழிந்தார்.
அப்போது பேசிய அவர், “மாநிலங்கள் தங்களது பொறுப்புகளைத் திறம்பட நிறைவேற்றுவதற்கு நியாயமான மற்றும் சமமான நிதிப் பகிர்வு முறை இன்றியமையாதது.
தமிழ்நாடு தொடர்ச்சியான பொருளாதார வளர்ச்சி, தொழில் முன்னேற்றம், ஏற்றுமதி, சிறந்த நிதி மேலாண்மை மற்றும் மத்திய அரசால் வசூலிக்கப்படும் வரிகளுக்கு குறிப்பிடத்தக்க அளவில் பங்களிப்பு செய்ததன் மூலம், தேசிய பொருளாதாரத்திற்கு தொடர்ந்து முக்கிய பங்களிப்பை வழங்கி வருகிறது.
தீர்மானம் மீது விவாதம் நடைபெற்று குரல் வாக்கெடுப்பு நடைபெறும்” என தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து நிதி பகிர்வு தொடர்பாக தவெக அரசு கொண்டு வந்த தீர்மானத்திற்கு திமுக, அதிமுக ஆதரவு அளித்ததன் மூலம் தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது.