சூரிச்:
பிஃபா மகளிர் உலகக் கோப்பை கால்பந்து தொடர் வரும் 2027-ம் ஆண்டு ஜூன் 24-ம் தேதி முதல் ஜூலை 25 வரை பிரேசிலில் நடைபெறுகிறது.
இந்த போட்டிக்கான அட்டவணையை சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பிஃபா அறிவித்தது.
எந்தெந்த அணிகள் யாருடன் மோதுகிறார்கள் என்ற விவரம் வெளியிடப்படாமல் போட்டி நடைபெறும் தேதி மற்றும் இடங்கள் மட்டும் வெளியிடப்பட்டுள்ளது.
தொடரின் அனைத்து ஆட்டங்களும் பிரேசிலில் உள்ள ரியோ டி ஜெனிரோ, சாவோ பாலோ, பிரேசிலியா, பெலோ ஹொரிசோன்டே, ஃபோர்டலேசா, சால்வடார், ரெசிஃப், போர்டோ அலெக்ரே ஆகிய 8 நகரங்களில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு நகரிலும் குறைந்தபட்சம் 7 ஆட்டங்கள் நடைபெற உள்ளன. இதில் ஒரு நாக் அவுட் போட்டியும் இருக்கும். மொத்தம் 64 ஆட்டங்கள் நடைபெறுகின்றன. தொடக்க மற்றும் இறுதிப்போட்டி புகழ்வாய்ந்த ரியா டி ஜெனிரோ நகரில் உள்ள மரக்கானா மைதானத்தில் நடைபெற உள்ளது.
தொடரை நடத்தும் பிரேசில் அணி, தனது முதல் ஆட்டத்தை ஜூன் 24 அன்று மரக்கானா மைதானத்தில் விளையாடுகிறது.
அதைத் தொடர்ந்து 2-வது ஆட்டத்தை ஜூன் 29-ல் சாவோ பாலோவில் உள்ள அரேனா இடாக்கேரா மைதானத்திலும், கடைசி லீக் ஆட்டத்தை ஜூலை 4 அன்று பிரேசிலியாவில் உள்ள எஸ்டாடியோ நேஷனல் மைதானத்திலும் விளையாடுகிறது பிரேசில் அணி.