தேனி சிறையிலிருந்து கைதிகள் தப்பி ஓடிய சம்பவம், தமிழக முதல்வர் விஜய்யின் தவெக அரசுக்கு ஏற்பட்டுள்ள வெட்கித் தலைகுனிய வேண்டிய படு தோல்வியாகும் ; பாஜக விமர்சனம்!!

சென்னை:
“சட்டம்- ஒழுங்கை பராமரிப்பதில் தவெக அரசு தனது குறைந்தபட்சத் திறமையையாவது நிரூபிக்கும் வரை, தேனி சம்பவம் அதன் நிர்வாகத் தோல்விக்கு பெரும் சான்றாகவே இருக்கும்” என்று பாஜக மாநில செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நேற்று, தேனி சிறையிலிருந்து கைதிகள் தப்பி ஓடிய சம்பவம், தமிழக முதல்வர் விஜய்யின் தவெக அரசுக்கு ஏற்பட்டுள்ள வெட்கித் தலைகுனிய வேண்டிய படு தோல்வியாகும்.

நேற்று, (அக்.26) இரவில், தேனி (தெக்கம்பட்டி) கிளைச் சிறையிலிருந்து விசாரணைக் கைதிகள் பதினேழு பேர் மிக எளிமையான தந்திரத்தைப் பயன்படுத்தி தப்பிச் சென்றுள்ளனர்.

அவர்கள் அனைவரும் ஒரே அறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், அவர்களில் ஒருவர் வலிப்பு வந்தது போல நடிக்க, மற்றவர்கள் காத்திருந்தனர்.

சிறை காவலர்கள் கதவைத் திறந்தபோது, கைதிகள் அவர்களைத் தாக்கிவிட்டு வெளியேறியுள்ளனர்.

இச்சம்பவத்தில் இரண்டாம் நிலை சிறை காவலர் தங்க பாண்டி தலைப் பகுதியில் காயமடைந்தார். தப்பிச் சென்றவர்களில் ஒருவர் மீண்டும் பிடிபட்ட நிலையில், மற்ற பதினாறு பேர் இன்னும் பிடிபடவில்லை.

இதையொட்டி, பல்வேறு மாவட்டங்களிலும், கேரள எல்லைப் பகுதியிலும் சிறப்புப் படைகள் அமைக்கப்பட்டு, சோதனைச் சாவடிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

இது மிகவும் பயங்கரமான அல்லது திட்டமிடப்பட்ட சிறை உடைப்பு அல்ல. மாறாக, தவெக அரசின் நிர்வாகத்தில் சிறைத்துறை பாதுகாப்பு எந்த அளவுக்குச் சீரழிந்துள்ளது என்பதைக் எடுத்துக் காட்டும் மோசமான சீர்கேடு.

பல விசாரணை கைதிகளை ஒரே அறையில் அடைத்து வைத்தி ருப்பது, மருத்துவ அவசர நிலை என்று கூறப்பட்டதைச் சரிபார்க்காமல் கதவைத் திறந்தது, மேலும் கைதிகள் அனைவரும் ஒன்றிணைந்து காவலர்களை தாக்கி வெளியேற அனுமதித்தது போன்ற வை, தவெக அரசின் திறமையின்மை, நிர்வாகக் கோளாறு மற்றும் நிர்வாக சீர்கேட்டையே வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.

பதினாறு சிறைக் கைதிகள் இன்று வெளியில் சுதந்திரமாகச் சுற்றித் திரியும் நிலையில், அதிகாரி களின் வழக்கமான அறிக்கைகள், தேடுதல் வேட்டைகள் குறித்த குழுக்கள் அமைப்பது ஆகியவை சட்டம்- ஒழுங்கை இரண்டாம் பட்சமாகக் கருதும் தவெக அரசு நிர்வாகத்தின் அலட்சிய போக்கையே காட்டுகிறது.

விசாரணை கைதிகள் ஒரு போலியான மருத்துவ அவசர நிலையை உருவாக்கி, அரசுக்குச் சொந்தமான சிறையிலிருந்து எளிதாக வெளியேற முடிந்த அவலத்திற்கு அந்தத் துறையைக் கையாளும் அமைச்சர் நிர்மல்குமாரும், முதல்வர் விஜய்யுமே பொறுப்பாவார்கள்.

காயமடைந்த சிறை காவலர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்பதோடு, தப்பிச் சென்ற மற்ற கைதிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும். மிக முக்கியமாக, யாருடைய அலட்சியத்தால் இந்தச் சம்பவம் நிகழ்ந்ததோ, அந்த அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்ட வேண்டும்.

ஒரு கிளைச் சிறையின் பாதுகாப்பு இவ்வளவு எளிதாக சமரசத்திற்கு உள்ளான கேடுகெட்ட நிலைக்கு தவெக அரசு பொறுப்பேற்பதோடு உரிய விளக்கமும் அளிக்க வேண்டும்.

சம்பந்தப்பட்ட அமைச்சர் மேற்கொள்ளும் பெயரளவு ஆய்வுகளோ அல்லது வெறும் உறுதி மொழிகளோ மட்டும் இந்த விவகாரத்தில் போதாது.

எந்தவொரு அரசாங்கமும் செய்ய வேண்டிய அடிப்படைப் பொறுப்பான சட்டம் – ஒழுங்கை பராமரிப்பதில் தவெக அரசு தனது குறைந்தபட்சத் திறமையையாவது நிரூபிக்கும் வரை, தேனி சிறை உடைப்பு சம்பவம் அதன் நிர்வாகத் தோல்விக்கு பெரும் சான்றாகவே இருக்கும்.” என்று நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *