அன்பில் மகேஸ் மீது இவ்வளவு வேகமான கைது நடவடிக்கை தேவையில்லாதது – அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி!!

சிவகாசி:
“அன்பில் மகேஸ் மீது இவ்வளவு வேகமான கைது நடவடிக்கை தேவையில்லாதது. வழக்கறிஞர் அலுவலகத்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்டிருப்பது உள்நோக்கம் கொண்டது” என அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

சிவகாசியில் மருது பாண்டியர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின் செய்தியாளர்களிடம் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி கூறியது: ”தவெக அரசு சட்டம் – ஒழுங்கில் கவனம் செலுத்துவதை விடுத்து, விளம்பரத்திலும், ரீல்ஸ் வீடியோக்களிலும் தான் அதிகமாக கவனம் செலுத்தி வருகிறது. காவல் துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி சட்டம் – ஒழுங்கை கட்டுக்குள் கொண்டுவர முதல்வரும், இந்த அரசும் முன்வரவில்லை.

சிறுமிகள் மாயமாவது, கொலைகள் நடப்பது, கைதிகள் ஒட்டுமொத்தமாக தப்பிச் செல்வது போன்ற சம்பவங்கள் சட்டம் – ஒழுங்கு சீர்கெட்டதன் அடையாளமாக உள்ளது. இது தவெக அரசின் இயலாமையை காட்டுகிறது.

நடிகர் தனுஷ் உறுதியாக கட்சி தொடங்குகிறார் என்பது அவரது நண்பர்கள் வாயிலாக எனக்கு தெரியும்.

முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் மீது இவ்வளவு வேகமான கைது நடவடிக்கை தேவையில்லாதது. வழக்கறிஞர் அலுவலகத்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்டிருப்பது உள்நோக்கம் கொண்டது.

பழிவாங்கும் எண்ணம் இல்லாமல் நியாயமான நடவடிக்கை எடுத்தால் பாராட்டத்தக்கது. எதிர்க்கட்சிகளை அழித்துவிடலாம் என தவெக நினைத்தால் அது ஒருபோதும் நடக்காது.

திராவிட இயக்கங்களின் ஆட்சியில் தான் தமிழகம் முன்னேறி உள்ளது. ஆட்சி, அதிகாரம் இருக்கிறது என்பதற்காக பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டால் அந்த எதிர்வினை அவர்களையே சுடும்.

தவெக ஆட்சியை கலைக்கும் முயற்சியில் யாரும் ஈடுபடவில்லை. பெரும்பான்மை இல்லாத நிலையில் தனது எம்எல்ஏக்கள் மீதும், கூட்டணி கட்சி எம்எல்ஏக்கள் மீதும் நம்பிக்கை இல்லாததால் அவர்கள் பயத்தில் உள்ளனர்.

பாஜகவின் 4-வது டீம் தனுஷ் என்றால், முதல் டீம் தவெகவா? தனுஷ் மீது பயம் உள்ளதால்தான் அவரைப் பற்றி பேசுகின்றனர். இந்த அரசுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. நிச்சயமாக மாற்றம் உண்டு, அது தவெகவுக்கு ஏமாற்றமாக அமையும்” என்றார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *