ராமேசுவரம் அருகே பாம்பன் பழைய ரயில் தூக்குப் பாலம் 80 சதவீதம் அகற்றம்!!

ராமேசுவரம்: ராமேசுவரம் அருகே பாம்பன் பழைய ரயில் துாக்குப் பாலம் 80 சதவீதம் அகற்றப்பட்டது.

ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் 24.02.1914-ல் பாம்பன் ரயில் பாலம் கட்டி முடிக்கப்பட்டு சென்னையில் இருந்து தனுஷ்கோடி ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்டது.

நூற்றாண்டை கடந்த இந்த பாம்பன் ரயில் பாலத்தின் தூக்குப் பாலத்தில் அடிக்கடி ஏற்பட்ட தொழில்நுட்பப் பிரச்சினைகள் மற்றும் விரிசல் விழுந்தால், இந்த பாலத்தின் அருகிலேயே புதிய ரயில் பாலம் கட்டும் பணிகள் 2019 ஆண்டு தொடங்கி, புதிய ரயில் பாலத்தை கடந்த 06.04.2025-ல் பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

பாம்பனில் உள்ள சாலை மற்றும் ரயில் பாலங்களை கடந்துதான் சிறிய ரக கப்பல்கள், ஆழ்கடல் மீன்பிடி படகுகள் பயணித்து வருகின்றன.

இந்த கப்பல்கள், படகுகள் செல்வதற்காக புதிய ரயில் பாலத்தின் நடுவே உள்ள செங்குத்து தூக்குப் பாலம் ஒவ்வொரு முறை தூக்கப்படும்போதும், சேதமடைந்த பழைய ரயில் தூக்குப் பாலமும் திறக்கப்பட வேண்டியது உள்ளது. இதனால் பழைய பாம்பன் பாலத்தை அகற்ற ரயில்வே நிர்வாகம் முடிவெடுத்தது.

எனவே, ரயில் விகாஸ் நிகம் லிமிடெட் (ஆர்விஎன்எல்) பழைய பாம்பன் பாலம் நடுவில் தூக்குப் பாலம் மற்றும் கர்டர் பாலம், தண்டவாளங்களை ரூ. 2.53 கோடியில் அகற்ற டேண்டர் கோரப்பட்டது.

தொடர்ந்து பழைய பாலத்தை அகற்றும் பணி பிப்ரவரி மாதம் முதல் தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதற்காக பழைய ரயில் பாலத்தை அகற்றுவதற்கு ஒப்பந்தம் கொண்ட தனியார் நிறுவனம் தூக்குப் பாலத்தின் மேற்கு பகுதியில் கேஸ் கட்டிங் செய்து துண்டுகளாக அகற்றும் பணியினை செய்ய தொடங்கினர்.

இந்நிலையில், பாம்பன் பழைய ரயில் தூக்குப் பாலத்தின் 80 சதவீதம் வெட்டி அகற்றப்பட்டுள்ளது. இவ்வாறு வெட்டி அகற்றப்பட்ட தூக்குப்பாலத்தின் பாகங்கள் அனைத்தும் பாம்பன் ரயில் பாலத்தின் நுழைவுப் பகுதியில் வைக்கப்பட்டுள்ளன.

மேலும், வெட்டி எடுக்கப்பட்ட பாம்பன் பழைய தூக்குப் பாலத்தை நினைவுச் சின்னமாக மாற்றி அமைக்க வேண்டும் என கோரிக்கையும் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *