ஆக்லாந்து:
இந்தியா – நியூஸிலாந்து அணிகள் இடையிலான 4-வது டி20 கிரிக்கெட் போட்டி ஆக்லாந்தில் உள்ள ஈடன் பார்க் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. முதலில் பேட் செய்த நியூஸிலாந்து அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 259 ரன்கள் குவித்தது.
இது அந்த அணியின் அதிகபட்ச ஸ்கோராக அமைந்தது. மேலும், டி20 சர்வதேச போட்டிகளில் இந்திய அணிக்கு எதிராக ஓர் அணி குவித்த அதிகபட்ச ஸ்கோராகவும் இது அமைந்தது. தனது 3-வது சதத்தை விளாசிய கிளென் பிலிப்ஸ் 49 பந்துகளில், 10 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 107 ரன்கள் விளாசினார்.
அவருக்கு உறுதுணையாக விளையாடிய மைக்கேல் பிரேஸ்வெல் 25 பந்துகளில், 6 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 65 ரன்கள் குவித்தார்.
இந்த ஜோடி 5-வது விக்கெட்டுக்கு 41 பந்துகளில் 115 ரன்கள் வேட்டையாடியது. இந்திய அணி தரப்பில் மயங்க் யாதவ் 3 விக்கெட்களை வீழ்த்தினார்.
260 ரன்கள் இலக்குடன் பேட் செய்த இந்திய அணியால் 20 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 172 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. ஜேக்கப் டஃபி வீசிய முதல் ஓவரிலேயே சஞ்சு சாம்சன் (4), இஷான் கிஷன் (0) ஆட்டமிழந்தனர்.
இதன் பின்னர் இந்திய அணி மீண்டுவர முடியாமல் சீரான இடைவேளையில் விக்கெட்களை பறிகொடுத்தது.
சஞ்சு சாம்சன் 4, இஷான் கிஷன் 0, அபிஷேக் சர்மா 27, கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் 22, அக்சர் படேல் 7, நிதிஷ் குமார் ரெட்டி 21, திலக் வர்மா 35, நமன் திர் 28, அர்ஷ்தீப் சிங் 0 ரன்களில் ஆட்டமிழந்தனர். பிரின்ஸ் யாதவ் 18, மயங்க் யாதவ் 3 ரன்கள் சேர்த்தனர்.
நியூஸிலாந்து அணி தரப்பில் ஜேக்கப் டஃபி 4 ஓவர்களை வீசி 23 ரன்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்களை வீழ்த்தினார்.
மேத்யூ பிஷர், மிட்செல் சாண்ட்னர் ஆகியோர் தலா 2 விக்கெட்களை கைப்பற்றினர். 87 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூஸிலாந்து அணிக்கு இது ஆறுதல் வெற்றியாக அமைந்தது.
5 ஆட்டங்கள் கொண்ட டி 20 தொடரில் முதல் 3 ஆட்டங்களிலும் இந்திய அணி ஏற்கெனவே வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியிருந்தது. 5-வது மற்றும் கடைசி போட்டி நாளை (நவம்பர் 1-ம் தேதி) ஹாமில்டனில் நடைபெறுகிறது.
நியூஸிலாந்து அணிக்கு எதிரான 4-வது டி 20 போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான அர்ஷ்தீப் சிங், 107 ரன்கள் விளாசிய கிளென் பிலிப்ஸ் விக்கெட்டை கைப்பற்றினார்.
சர்வதேச டி 20 அரங்கில் அர்ஷ்தீப் கைப்பற்றிய 150-வது விக்கெட்டாக இது அமைந்தது. இதன் மூலம் இந்த சாதனையை நிகழ்த்திய முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார்.