ராய்ப்பூர்:
சத்தீஸ்கர் மாநிலத்தில் ஒரு காலத்தில் ‘ரெட் காரிடார்’ (நக்சல் பாதிப்புப் பகுதிகள்) என்று அழைக்கப்பட்ட பகுதிகள், தற்போது அமைதி, நம்பிக்கை மற்றும் வளர்ச்சியின் மையங்களாக உருவெடுத்துள்ளன என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
சத்தீஸ்கர் மாநிலம் உருவான தினத்தை முன்னிட்டு முதல்வர் விஷ்ணு தேவ் சாய்க்கு பிரதமர் நரேந்திர மோடி எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
சத்தீஸ்கர் மாநிலத்தின் முன்னேற்றத்துக்கு மாவோயிஸ்ட் வன்முறை நீண்ட காலமாக மிகப் பெரிய தடையாக இருந்தது.
தற்போது நிலைமை முற்றிலும் மாறிவிட்டது. சில ஆண்டுகளுக்கு முன்பு நக்சலிசத்தின் சிவப்பு வழித்தடம் என அறியப்பட்ட பகுதிகள் இன்று அமைதி, நம்பிக்கை, வளர்ச்சியின் புதிய மையங்களாகி வருகின்றன.
இந்த மாற்றம் இணைப்பு வசதிகள், நவீன உள்கட்டமைப்பின் விரிவாக்கத்தை விரைவுபடுத்தியுள்ளது.
25 ஆண்டுகளுக்கு முன்பு டெல்லி – ராய்ப்பூர் இடையே ஒரே ஒரு விமானம் மட்டுமே இயங்கிய நிலையில், தற்போது மாநிலத்தில் 4 நவீன விமான நிலையங்கள் இயங்கி வருகின்றன.
மேலும், சத்தீஸ்கரில் ரூ.51,000 கோடிக்கு மேல் ரயில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. வந்தே பாரத், அம்ரித் பாரத் ரயில் சேவைகளும் தொடங்கப்பட்டுள்ளன.
இதனால் ராய்ப்பூர் – பிலாஸ்பூர் பயண நேரம் பாதியாகக் குறைந்துள்ளது. புதிய விரைவுச் சாலைகள் மூலம் தொழிலும் வேலைவாய்ப்பும் பெருகும்.
பிரதமரின் கரீப் கல்யாண் அன்ன யோஜனா மற்றும் மாநில அரசுத் திட்டங்கள் மூலம் 73 லட்சம் குடும்பங்களுக்கு இலவச உணவு தானியம் வழங்கப்படுகிறது. கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறங்களில் 22 லட்சம் வீடுகள் கட்டப்பட்டுள்ளன.
41 லட்சத்துக்கும் மேற்பட்ட கிராமப்புறக் குடும்பங்களுக்கு குழாய் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
மாநிலத்தின் நெல் கொள்முதல் முறை 25 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு மேம்பட்ட விலையை அளித்து, கிராமப்புறப் பொருளாதாரத்தை வலுப்படுத்துகிறது.
மஹ்தாரி வந்தன் யோஜனாவின் கீழ் 68 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்களுக்கு மாதந்தோறும் ரூ 1,000 வழங்கப்படுகிறது. நவா ராய்ப்பூர் ஒரு நவீன நகரமாக உருவாகி வருகிறது.
மருந்துத் தயாரிப்பு, ஜவுளி, தகவல் தொழில்நுட்பம், மின்சாரம், அலுமினியம், எஃகு போன்ற துறைகளில் வாய்ப்புகள் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
நியாத் நெல்லநார், வாழ்வாதார மேம்பாட்டுத் திட்டங்கள், முதலமைச்சர் ஸ்வஸ்த் பஸ்தர் ஆகிய முயற்சிகள் மக்களுக்கு அடிப்படை வசதிகளைக் கொண்டு சேர்க்க உதவுகிறது.
பஸ்தர் இன்று அமைதி, நல்லாட்சி, செழிப்பு என்ற புதிய பாதையில் முன்னேறிச் செல்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.