ரூ.23 கோடியில் புதுக்கோட்டையில் கட்டப்பட்டுள்ள பேருந்து நிலையத்தை திறந்து வைத்து 14 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதலமைச்சர் விஜய்…

திருச்சி;
முதலமைச்சர் விஜய் ஒவ்வொரு மாவட்டம் வாரியாக சுற்றுப்பயணம் செய்து பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார்.

அதன் தொடர்ச்சியாக புதுக்கோட்டையில் இன்று அரசு சார்பில் நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் விஜய் கலந்து கொண்டு புதிய திட்டப்பணிகளை தொடங்கி வைத்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சிகள் முதலில் புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக ஆயுதப்படை மைதானத்தில் பிரமாண்டமான மேடை அமைக்கப்பட்டு, அலங்கார பணிகள் செய்யப்பட்டன. தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. விழாவில் 2 ஆயிரம் பேர் பங்கேற்கும் வகையில் இருக்கைகளும் போடப்பட்டது.

குடிநீர், தற்காலிக பந்தல், மின்சார வசதி மற்றும் வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டு இருந்தன.


இந்த நிலையில் நேற்றிரவு திடீரென முதலமைச்சர் விஜய் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டது. இதையடுத்து அங்கு நிகழ்ச்சிக்கான மேடைகள் அமைக்கும் பணி மற்றும் பயனாளிகளுக்கான வசதிகள் உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் இரவோடு இரவாக செய்யப்பட்டது.

இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் விஜய் இன்று காலை சென்னை நீலாங்கரையில் உள்ள தனது இல்லத்தில் இருந்து காரில் புறப்பட்டார். சென்னை விமான நிலையம் சென்ற அவர் அங்கிருந்து தனி விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் சென்றார்.

அங்கிருந்து சாலை மார்க்கமாக புதுக்கோட்டைக்கு புறப்பட்டு சென்றார். திருச்சி- புதுக்கோட்டை எல்லையான மாத்தூரில் த.வெ.க. சார்பில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர் அங்கிருந்து புதுக்கோட்டைக்கு சென்ற முதலமைச்சர் விஜய், கட்டியாவயல் பிரிவு சாலையில் இருந்து கலெக்டர் அலுவலகம் வரை ரோடு ஷோவாக மக்களை பார்த்து கையசைத்த படியே சென்றார்.


பின்னர் புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்திற்கு முதலமைச்சர் விஜய் சென்றடைந்தார். அப்போது அவர் பட்டு வேட்டி, பட்டு சட்டை அணிந்திருந்தார். கலெக்டர் அலுவலக வளாகத்தில் அவருக்கு போலீஸ் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் அவருக்கு வரவேற்பு அளித்தனர்.

கலெக்டர் அலுவலகத்தில் காட்சி அரங்கு ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. அங்கு பாரம்பரிய நெல் வகைகள், பயிர்கள் மற்றும் விவசாய உபகரணங்கள் வைக்கப்பட்டு இருந்தன. அந்த அரங்குக்கு சென்ற முதலமைச்சர் விஜய் பாரம்பரிய நெல் வகைகள் மற்றும் பயிர்களை பார்வையிட்டார்.

மகளிர் சுய உதவிக்குழுவை சேர்ந்த பெண் ஒருவர் அவருக்கு முந்திரி உடைத்து காண்பித்தார். அவரிடம் முந்திரி விவசாயம் தொடர்பாக முதலமைச்சர் விஜய் கேட்டறிந்தார். நாற்று நடும் எந்திரம் பற்றி அவருக்கு கலெக்டர் அருணா எடுத்துரைத்தார்.

பின்னர் கலெக்டர் அலுவலகத்தின் 3-வது தளத்தில் திட்டப்பணிகள் தொடக்க விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. அங்கு சென்ற முதலமைச்சர் விஜய்யை பயனாளிகள் எழுந்து நின்று வரவேற்றனர். அவர்களுக்கு முதலமைச்சர் விஜய் வணக்கம் தெரிவித்தார். பின்னர் விழா தொடங்கியது. அமைச்சர் முகமது பர்வேஸ் வரவேற்புரை நிகழ்த்தினார்.

விழாவில் முதலமைச்சர் விஜய் ரூ.68.31 கோடியில் முடிவுற்ற 44 திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார். ரூ.11.72 கோடி மதிப்பில் 70 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். ரூ.62.73 கோடி மதிப்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

புதுக்கோட்டையில் கட்டப்பட்டுள்ள புதிய பல்நோக்கு உள் விளையாட்டரங்கம் மற்றும் பல்வேறு திட்டப்பணிகளை திறந்து வைத்தார். அங்கிருந்த பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா, கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை, கல்வி உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை, புதிய மின்னணு குடும்ப அட்டை, இலவச தையல் எந்திரம், சலவை பெட்டி, மகளிர் சுய உதவிக்குழு கடன், நீர்ப்பாசன கடன், திருமண உதவித்தொகை, நெல் நாற்று நடும் எந்திரம், டிராக்டர், பெண் குழந்தை பாதுகாப்பு திட்ட முதிர்வு தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கு காதொலி கருவி, வங்கி கடன் உதவி ஆகியவற்றை வழங்கினார்.

பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு அவர்களின் இருக்கைக்கே சென்று முதலமைச்சர் விஜய் உதவிகளை வழங்கினார். அப்போது பார்வையற்ற மாற்றுத்திறனாளி ஒருவர் வைத்த கோரிக்கையை பரிவுடன் ஏற்றுக்கொண்டார்.

மொத்தம் 14ஆயிரம் பயனாளிகளுக்கு நல உதவிகளை வழங்கினார். இதில் 104 பயனாளிகளுக்கு மேடையிலேயே நேரடியாக நல உதவிகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் என். ஆனந்த், முகமது பர்வேஸ் மற்றும் கலெக்டர் அருணா மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

கலெக்டர் அலுவலக நிகழ்ச்சிகள் முடிந்ததும் அங்கிருந்து புதுக்கோட்டை சத்தியமூர்த்தி சாலையில் உள்ள புதிய பஸ் நிலையத்துக்கு முதலமைச்சர் விஜய் சென்றார். அங்கு ரூ.23 கோடியே 25 லட்சம் செலவில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட புதிய பஸ் நிலையத்தை திறந்து வைத்து பார்வையிட்டார். பயணிகளுக்கு செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

அனைத்து நிகழ்ச்சிகள் முடிந்ததும் மதியம் புதுக்கோட்டை ரோஜா இல்லத்திற்கு சென்று மதிய உணவு சாப்பிட்டு விட்டு ஓய்வு எடுக்கிறார். பின்னர் மதியம் 2.45 மணிக்கு புதுக்கோட்டையில் இருந்து கார் மூலம் திருச்சி விமான நிலையத்திற்கு சென்று அங்கிருந்து தனி விமானம் மூலம் சென்னை திரும்புகிறார்.

முதலமைச்சர் விஜய் வருகையையொட்டி புதுக்கோட்டை நகரில் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ரோடு ஷோ சென்ற இடங்கள், விழா நடைபெற்ற இடங்கள், அவர் பயணித்த வழித்தடங்கள் உள்ளிட்ட பகுதிகளில் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டனர்.

மேலும் திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் இன்று டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டதுடன், திருச்சி- புதுக்கோட்டை வழியில் 7 மதுக்கடைகள், புதுக்கோட்டையில் 6 மதுக்கடைகள் என மொத்தம் 13 மதுக்கடைகள் மூடப்பட்டன. முதலமைச்சர் விஜய் வருகை திருச்சி, புதுக்கோட்டை மாவட்ட த.வெ.க. நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *