சேலம்:
“தமிழகத்தில் கொலை நடக்காத நாளே இல்லை என்ற அளவுக்கு சட்டம் – ஒழுங்கு சீரழிந்துள்ளது. தவெக அரசு கும்பகர்ண தூக்கத்தில் இருந்து எழுந்து சட்டம் – ஒழுங்கை சரிசெய்ய வேண்டும்” என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினார்.
இது குறித்து அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், “தவெக கொடுத்த பெரும்பாலான வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. ரீல்ஸை நம்பிதான் ரீல்ஸ் ஆட்சி நடக்கிறது.
முதல்வர் விஜய் மக்களுக்கு தேவையான பெரிய திட்டங்களை அறிவிக்கவில்லை. தவெக அரசு கும்பகர்ணன் போல தூங்கிக் கொண்டிருக்கிறது. அரசு செயல்படுகிறதா, இல்லையா என்று கூட மக்களுக்கு தெரியவில்லை.
பாதுகாப்பு நிறைந்த முதல்வரின் முகாம் அலுவலகம் அருகிலேயே கொலை நடக்கும் அளவுக்கு சட்டம் – ஒழுங்கு இருக்கிறது.
தமிழகத்தில் கொலை நடக்காத நாளே இல்லை என்ற அளவுக்கு சட்டம் – ஒழுங்கு சீரழிந்துள்ளது. சட்டம் – ஒழுங்கை, கடந்த ஆட்சியுடன் ஒப்பிட்டுப் பேசுவது சரியான நடைமுறை இல்லை.
கிராமத்தில் இருந்து நகரம் வரை மாநிலம் முழுவதும் போதைப்பொருள் அமோகமாக விற்பனை செய்யப்படுவதாக செய்திகள் வருகின்றன.
தமிழகத்தில் கொலை நடக்காத நாள் கிடையாது. தீபாவளி அன்று 11 கொலைகள் நடந்துள்ளன. இதை அமைச்சர் ராஜ்மோகன், கடந்த ஆட்சியுடன் நடந்த கொலையுடன் ஒப்பிட்டுப் பேசுவது சரியல்ல. கஞ்சா விற்பனையை இந்த அரசால் தடுக்க முடியவில்லை.
அமைச்சர் ஆதவ் அர்ஜுனா 6 மாதத்தில் சிறப்பான ஆட்சி கொடுப்போம் என்றார். ஆனால் துயரமான ஆட்சிதான் கொடுத்து வருகிறார்கள்.
கொலை நடக்காமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். போலீஸாருக்கே பாதுகாப்பு இல்லாத நிலைதான் இந்த ஆட்சியில் நடக்கிறது. குற்றவாளிகளுக்கு போலீஸ் மீது அச்சம் இல்லை.
ஒரு பெண் ஆட்சியருக்கு தவெக எம்எல்ஏ ஆபாச குறுஞ்செய்தி அனுப்புகிறார். ஆனால் ஏன் அவர் மீது இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை? பெரும்பாலான கட்சித் தலைவர்கள் இந்தச் சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்த அரசு தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறோம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.