கந்த சஷ்டி திருவிழாவையொட்டி திருச்செந்தூர் கடற்கரையில் நாளை சூரசம்ஹாரம்- பக்தர்கள் குவிந்தனர்… !!

முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்த சஷ்டி திருவிழா கடந்த 10-ந்தேதி யாக பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

விழாவில் ஒவ்வொரு நாளும் காலை 7மணிக்கு யாகசாலையில் யாக பூஜை தொடங்கி பகல் 12 மணிக்கு தீபாராதனை நடைபெற்று 12.45 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி-தெய்வானையு டன் தங்கச்சப்பரத்தில் வேல் வகுப்பு,வீரவாள் வகுப்பு ஆகிய பாடல்களுடன் மேள தாளம் முழங்க சண்முக விலாச மண்டபத்தில் எழுந்தருளி அங்கு சுவாமிக்கு மகா தீபாராதனை நடைபெற்று வருகிறது.

மாலை 4.30மணியளவில் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானை அம்பாளுடன் திருவாடுதுறை ஆதின சஷ்டி மண்டபத்தில் எழுந்தருள்வார். அங்கு சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் நடைபெற்று அலங்கார தீபாராதனைக்கு பிறகு சுவாமி ஜெயந்தி நாதர் அம்பாளுடன் தங்க தேரில் எழுந்தருளி கிரிவீதியில் உலா வந்து கோவில் சேர்தல் நடைபெற்று வருகிறது.


விழாவின் சிகர நிகழ்ச்சியான 6-ந்தேதி திருவிழா சூரசம்ஹாரம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4மணிக்கு கடற்கரையில் நடக்கிறது.

முன்னதாக காலை 6மணிக்கு யாகசாலையில் யாக பூஜை தொடங்கி பகல் 12 மணிக்கு யாகசாலையில் தீபாராதனைக்கு பிறகு பகல் 12.45 மணிக்கு சண்முக விலாசம் மண்டபத்தில் சுவாமி ஜெயந்தி நாதர் எழுந்தருளி அங்கு தீபாராதனைக்குப்பின் பகல் 2மணிக்கு திருவாவடுதுறை ஆதீனம் சஷ்டி மண்டபத்தில் சுவாமிக்கு அபிஷேகம் அலங்காரம் நடைபெற்று தீபாராதனைக்கு பின் சுவாமி ஜெயந்தி நாதர் மாலை 4மணிக்கு கடற்கரையில் எழுந்தருளி சூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடக்கிறது.

7-ம் திருவிழாவான 16-ந்தேதி அதிகாலை 5மணிக்கு தெய்வானை அம்பாள் தபசு காட்சிக்கு புறப்படுதல், மாலை 6மணிக்கு சுவாமி அம்பாளுக்கு காட்சி கொடுத்து தோள் மாலை மாற்றும் நிகழ்ச்சி நடைபெற்று இரவு 11மணிக்கு மேல் சுவாமி குமரவிடங்க பெருமானுக்கும், தெய்வானை அம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடக்கிறது.

கந்த சஷ்டி திருவிழாவில் கலந்து கொண்டு விரதம் மேற்கொள்வதற்காக தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் இலங்கை, பிரான்ஸ், மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து கொண்டிருக்கின்றனர்.

அவர்கள் கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள நிரந்தர மற்றும் தற்காலிக கொட்டகையில் தங்கி விரதம் மேற்கொண்டு வருகின்றனர்.


பக்தர்களின் குடிநீர் தேவைக்காக விழா நாட்களில் நகராட்சி மற்றும் குடிநீர் வடிகால் வாரியம் மூலம் தினசரி 5 லட்சம் லிட்டர் குடிநீர் நகராட்சி பகுதி மற்றும் கோவில் வளாகத்தில் 30 இடங்களில் வழங்கப்படுகிறது. தனியார் அமைப்புகளும் குடிநீர் வழங்கி வருகின்றனர்.

சுகாதாரப்பணிக்காக நகராட்சி சுகாதார பணியாளர்கள் 130 பேர், கோவில் சுகாதார பணியாளர்கள் 339 பேர் மற்றும் கூடுதலாக சிறப்பு பணியாளர்கள் 450 பேர் என மொத்தம் 919 பேர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


கோவில் வளாகத்தில் 3 இடங்களில் மருத்துவக்குழுக்களும், 6 இடங்களில் ஆம்புலன்ஸ் வாகனங்களும் நகர் மற்றும் கோவில் பகுதியில் 4 தீயணைப்பு வாகனங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

பக்தர்களின் பாதுகாப்பிற்காக 493 இடங்களில் சி.சி.டி.வி கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. விரதமிருக்கும் பக்தர்களுக்கு கோவில் வளாகத்தில் 5 இடத்தில் நிரந்தர தங்குமிடங்களும், 11 இடங்களில் தற்காலிக செட்களும் அமைக்கப்பட்டுள்ளது. 325 நிரந்தர கழிப்பறைகளும், 300 தற்காலிக கழிப்பறைகள் வசதி செய்யப்பட்டுள்ளது.

திருவிழாவிற்கு வரும் பக்தர்கள் வசதிக்காக பல்வேறு வழித்தடங்களில் சுமார் 302 பஸ்களும், சூரசம்ஹாரம் நடைபெறும் தினத்தன்று 2 சிறப்பு ரெயில்களும் இயக்கப்பட உள்ளன.


பக்தர்களின் பாதுகாப்பு பணிக்காக 4298 போலீசார், கடலோரத்தில் மீன்வளத்துறை, தீயணைப்புத்துறையுடன் இணைந்து தயார் நிலையில் மீட்புக்குழுவினர் உள்ளனர். கடலில் பாதுகாப்பு உபகரணங்களுடன் படகுகள் ரோந்து பணியில் தயார் நிலையில் வீரர்கள் உள்ளனர்.

கோவில் வளாகத்தில் பக்தர்கள் சூரசம்ஹார நிகழ்ச்சியை காணுவதற்கு வசதியாக 26 இடங்களில் பெரிய எல்.இ.டி. டி.வி.க்கள் வைக்கப்பட்டுள்ளது.


இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *