சென்னை:
மக்கள்தொகை கணக்கெடுப்பின்போது பொதுமக்கள் அளிக்கும் விவரங்களை தனிப்பட்ட முறையில் யாருடனும் பகிர்ந்து கொள்ளக் கூடாது என கணக்கெடுப்பாளர்களுக்கு மாநில ஒருங்கிணைப்பு அலுவலர் பி.சந்திரமோகன் அறிவுரை வழங்கினார்.
தமிழ்நாடு மக்கள்தொகை கணக்கெடுப்பு இயக்குநரகம் சார்பில் கணக்கெடுப்பு முதன்மை பயிற்சியாளர்களுக்கான 4 நாள் பயிற்சி முகாம் சென்னை தரமணியில் உள்ள தேசிய தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி நிறுவன வளாகத்தில் நேற்று தொடங்கியது.
இம்முகாமை தமிழக அரசின் வருவாய் நிர்வாக ஆணையரும், மக்கள் தொகை கணக்கெடுப்பு மாநில ஒருங்கிணைப்பு அலுவலருமான பி.சந்திரமோகன் தொடங்கிவைத்து பேசியதாவது: மக்கள்தொகை கணக்கெடுப்பு தற்போது முதல்முறையாக 100 சதவீதம் டிஜிட்டல் முறையில் நடைபெறுகிறது.
கணக்கெடுப்பாளர்கள் பதிவுசெய்யும் ‘இன்புட்’ உள்ளடக்கத்துக்கு ஏற்பவே ‘அவுட்புட்’ கிடைக்கும். தகவல்களின் துல்லியம் மிகவும் முக்கியமானது.
எனவே, இப்பணியில் ஈடுபடும் அலுவலர்கள் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும். மேலும், 2-வது கட்ட கணக்கெடுப்பு பணியில் பொதுமக்களின் தனிப்பட்ட விவரங்கள் தொடர்பான தகவல்களை சேகரிக்க வேண்டியிருக்கும்.
எனவே, கணக்கெடுப்பாளர்கள் மிகவும் கவனமுடன் பணியாற்ற வேண்டும். தகவல்களை தனி்ப்பட்ட முறையில் யாருடனும் பகிரக்கூடாது. வழிகாட்டு நெறிமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
தமிழ்நாடு மக்கள்தொகை கணக்கெடுப்பு இயக்குநர் எம்.சுந்தரேஷ்பாபு பேசியதாவது: ஆகஸ்ட் 1 முதல் 30-ம் தேதி வரை நடைபெற்ற மக்கள்தொகை கணக்கெடுப்பு முதல்கட்ட பணியின்போது பொதுமக்களிடம் 33 விதமான கேள்விகள் கேட்கப்பட்டு விவரங்கள் சேகரிக்கப்பட்டன.
2-வது கட்ட களப்பணி ஜன.25 முதல் பிப். 28 வரை நடைபெற உள்ளது. இதில் 40 கேள்விகளுக்கு பொதுமக்கள் விவரங்களை அளிக்க வேண்டும்.
இந்தக் காலக்கட்டத்தில் தகவல்களை அளிக்க தவறியவர்களுக்கு மார்ச் 1 முதல் 5 வரை கால அவகாசம் அளிக்கப்படும். இந்த 4 நாள் பயிற்சி முகாமில் தமிழகத்தைச் சேர்ந்த 160 முதன்மை பயிற்சியாளர்களுக்கும், புதுச்சேரியைச் சேர்ந்த 4 பேருக்கு்ம் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இவர்கள் மூலம் 3 ஆயிரம் களப்பணியாளர்களுக்கும் அவர்கள் மூலமாக 1.4 லட்சம் கணக்கெடுப்பாளர்கள், 20 ஆயிரம் மேற்பார்வையாளர்களுக்கும் பயிற்சி அளிக்கப்படும்.
இதில் சாதி உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்கள் தொடர்பான கேள்விகள் இடம்பெறுவதால் கணக்கெடுப்பாளர்கள் கவனத்துடனும் பொறுப்புணர்வுடனும் செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.