சோனியா காந்தி சுயசரிதை புத்தகம் வெளியீடு: தமிழக முதல்வர் விஜய் உட்பட 7 மாநிலங்களின் முதல்வர்கள் மற்றும் பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்பு!!

புதுடெல்லி:
காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியின் சுயசரிதை டெல்லியில் நேற்று வெளியிடப் பட்டது.

இதில் தமிழக முதல்வர் விஜய் உட்பட 7 மாநிலங்களின் முதல்வர்கள் மற்றும் பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி எழுதிய “பிலாங்கிங்: ஏ ஜர்னி ஆஃப் லவ்” என்ற சுயசரிதை கடந்த 10-ம் தேதி வெளியானது. இந்த புத்தகத்தின் அதிகாரப்பூர்வ வெளியீட்டு விழா டெல்லி ஐடிசி மவுரியா நட்சத்திர ஓட்டலில் நேற்று நடைபெற்றது.

தமிழக முதல்வர் விஜய், கர்நாடக முதல்வர் சிவகுமார், கேரள முதல்வர் சதீசன், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, இமாச்சல பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங், ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா மற்றும் சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், திரிணமூல் காங்கிரஸ் பொதுச்செயலாளர் அபிஷேக் பானர்ஜி உட்பட பல்வேறு கட்சிகளின் மூத்த தலைவர்கள் இந்த விழாவில் பங்கேற்றனர்.

முதல் வரிசையில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் அமர்ந்திருந்தனர். தமிழக முதல்வர் விஜய், ராகுலுக்கு அருகே அமர வைக்கப்பட்டார்.

பஞ்சாப் முன்னாள் முதல்வரும் பாஜக மூத்த தலைவருமான அமரிந்தர் சிங்கும் விழாவில் பங்கேற்றார்.

சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் இணைந்து சுயசரிதை நூலை வெளியிட்டனர். விழாவில் சோனியா காந்தி பேசியதாவது:

முன்னாள் பிரதமரும் எனது மாமியாருமான இந்திரா காந்தியை பார்த்து நான் அஞ்சி நடுங்குவேன். எனது கணவர் ராஜீவ் காந்தியும், அவரது தம்பி சஞ்சய் காந்தியும் இந்திரா காந்தியுடன் நெருங்கிப் பழகுவார்கள். ‘மம்மி’ என்று உரிமையோடு அழைப்பார்கள்.

ஆனால் இந்திரா காந்தியை, மம்மி என்று அழைக்க எனக்கு விருப்பம் கிடையாது. என்னை பெற்றெடுத்த தாயை மட்டுமே மம்மி என்று அழைப்பேன் என்று பிடிவாதமாக இருந்தேன்.

ஆனால் படிப்படியாக இந்திரா காந்தியோடு நெருக்கமானேன். என்னை அறியாமல் அவரை மம்மி என்று அழைக்கத் தொடங்கிவிட்டேன்.

ஆரம்ப காலத்தில் எனது அப்பாவை போன்று இந்திரா காந்தியும் அதிகமாக கோபப்படுவார். ஆனால் ராகுலும் பிரியங்காவும் பிறந்த பிறகு அவரது கோபம் மறைந்துவிட்டது.

நான் யாரிடமும் எளிதில் பழகமாட்டேன். அதிகமாக தனிமையை விரும்புவேன். எனது வாழ்க்கை குறித்த சுயசரிதையை எழுத எனக்கு விருப்பம் கிடையாது. ஆனால் எனது குடும்பம் குறித்து பலரும் எதிர்மறையாக விமர்சித்தனர்.

மேலும் சுயசரிதை எழுத ராகுல், பிரியங்கா, எனது தோழி மஞ்சுலிகா துபே ஆகியோர் வற்புறுத்தினர்.

அவர்களின் விருப்பத்துக்காக சுயசரிதையை எழுதினேன். எனது ஆரம்ப கால அரசியல் வாழ்க்கையில் என்னை மிகவும் மோசமாக விமர்சனம் செய்தனர். நான் இந்த மண்ணை சேர்ந்தவள் கிடையாது.

எனக்கு எதுவும் தெரியாது என்று வசைபாடினர். ஆனால் 2004-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் வெற்றி எல்லாவற்றையும் மாற்றியது. இவ்வாறு சோனியா பேசினார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *