திருமலை:
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று மாலை மிகவும் விமரிசையாக புஷ்ப யாகம் நிகழ்ச்சி நடந்தது.
பிரம்மோற்சவ விழாவினை தொடர்ந்து புஷ்பயாகம் நடைபெறுவது ஐதீகம். பிரம்மோற்சவத்தில் ஏதாவது தோஷங்கள் நடந்திருந்தால், திருவோண நட்சத்திரத்தன்று புஷ்பயாகம் நடத்துவது ஐதீகம்.
கடந்த 15-ம் நூற்றாண்டு வரை நடைபெற்று வந்த இந்த நடைமுறை் சில காரணங்களால் கைவிடப்பட்டது.
பின்னர் திருமலை திருப்பதி தேவஸ்தானம் 1980-ம் ஆண்டு முதல் தொடர்ந்து புஷ்பயாகத்தை வைகானச ஆகம சாஸ்திரங்களின்படி மீண்டும் நடத்தி வருகிறது. இந்த புஷ்பயாகம் நேற்று திருமலையில் விமரிசையாக நடைபெற்றது.
இதன்படி, நேற்று காலை கோயிலில் உள்ள சம்பங்கி திருக்கல்யாண மண்டபத்தில் உற்சவ மூர்த்திகளான ஸ்ரீதேவி, பூதேவி சமேதமாய் மலையப்பருக்கு சிறப்பு திருமஞ்சன் நிகழ்ச்சிகள் நடந்தன.
16 ரக மலர்கள், 6 ரக புனித பத்திரங்கள் (இலைகள்) ஊர்வலமாக கோயிலுக்கு கொண்டு வரப்பட்டன. இதனை தொடர்ந்து நேற்று மாலை உற்சவ மூர்த்திகளுக்கு 9 டன் மலர்கள் மற்றும் புனித பத்திரங்களால் புஷ்பாபிஷேகம் நடைபெற்றது.