கார்த்திகை மாதப்பிறப்பை முன்னிட்டு மாலை அணிவித்து விரதம் தொடங்கிய அய்யப்ப பக்தர்கள்!!

சென்னை, கார்த்திகை மாதப்பிறப்பை முன்னிட்டு அய்யப்ப பக்தர்கள் மாலை அணிவித்து விரதம் தொடங்கினர். இதனால் இன்று கோவில்களில் அய்யப்ப பக்தர்களின் கூட்டம் அலைமோதியது.

கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு ஆண்டுதோறும் மண்டல விளக்கு மற்றும் மகர விளக்கு பூஜை காலத்தில் ஏராளமான பக்தர்கள் இருமுடி கட்டி செல்வார்கள்.

இவ்வாறு செல்லும் பக்தர்கள் பெரும்பாலும் கார்த்திகை மாதம் முதல் தேதியன்று மாலை அணிந்து விரதத்தை தொடங்குவார்கள்.

பின்னர் அவர்கள் விரதமிருந்து சபரிமலைக்கு சென்று அய்யப்பனை தரிசனம் செய்வார்கள். இதனால், கார்த்திகை மாதம் பிறந்ததுமே அனைத்து பகுதிகளிலும் சுவாமி அய்யப்பனின் சரண கோஷம் ஒலிக்க தொடங்கிவிடும்.

அவ்வகையில், இந்த ஆண்டின் கார்த்திகை மாதம் இன்று தொடங்கிய நிலையில், அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினர்.

பக்தர்கள் அருகில் உள்ள கோவில்களுக்கு சென்று, சிறப்பு பூஜைகள் செய்து, மாலை அணிந்துகொண்டனர். அவர்களுக்கு குருசாமிகள் மற்றும் கோவில் அர்ச்சகர்கள் அய்யப்ப மாலை அணிவித்தனர். இதனால் இன்று கோவில்களில் அய்யப்ப பக்தர்கள் அதிக அளவில் குவிந்தனர்.

திருச்செந்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள அய்யப்ப பக்தர்கள் மாலை அணிவதற்காக, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் குவிந்தனர். கடலில் புனித நீராடிய பக்தர்கள் தங்கள் குருசாமியின் கைகளினால் மாலை அணிந்து கொண்டனர்.

மேலும் திருச்செந்தூர் சிவன் கோவில், ஆனந்த விநாயகர் கோவில், தூண்டுகை விநாயகர் கோவில், அய்யப்பன் சன்னதி உள்ளிட்ட இடங்களில் மாலை அணிந்து விரதம் தொடங்கினர். புதிதாக மாலை அணிந்து கொண்டவர்களுக்கு விரத நாட்களில் கடைபிடிக்க வேண்டிய முறைகள் குறித்து குருசாமிகள் விளக்கி கூறினார்கள்.

களக்காடு ஆற்றாங்கரை தெருவில் ஐயப்பன் கோயில் உள்ளது. சபரிமலையில் உள்ளதை போலவே இங்கும் பூஜை முறைகள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. கார்த்திகை மாதத்தை முன்னிட்டு களக்காடு ஐயப்பன் கோயில் நடை நேற்று மாலை திறக்கப்பட்டது.

கார்த்திகை மாதத்தின் முதல் தேதியான இன்று கணபதி ஹோமம் நடத்தப்பட்டது. அதனைதொடர்ந்து பக்தர்களுக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, சரண கோஷத்துடன் மாலை அணிந்து விரதம் தொடங்கினர்.

மாலை 6 மணிக்கு விஸ்வரூப தரிசனம் நடைபெறும். இரவு 7 மணிக்கு ஐயப்பனுக்கு அபிஷேகமும், 8 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜைகளும் நடத்தப்படுகிறது.

அதன் பின் இரவு 9 மணிக்கு அத்தாழ பூஜை நடக்கிறது. வருகிற 28ம் தேதி (சனிக்கிழமை) வருஷாபிஷேக விழாவும், டிசம்பர் 27ம் தேதி மண்டல பூஜை விழாவும் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

பூதலூர் ஸ்ரீ ஆனந்த விநாயகர் ஆலயத்தில்ஐயப்ப பக்தர்கள் மாலை அணியும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஆனந்த விநாயகர் ஆலயத்தின் முன் பகுதியில் ஸ்ரீ ஐயப்பனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

பின்னர் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சுவாமி அய்யப்பன், சரண கோஷம் முழங்க ஐயப்ப பக்தர்கள் பின்தொடர, கோவிலை வலம் வந்து கோவிலின் முன்பு எழுந்தருளினார். அங்கு சுவாமியின் முன்பு பக்தர்கள் மால அணியும் நிகழ்ச்சி நடைபெற்றது. அய்யப்ப பக்தர்களுக்கு குருசாமிகள் மாலை அணிவித்தனர்.

நடப்பு மண்டல, மகர விளக்கு சீசனுக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நேற்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. தந்திரி கண்டரரு பிரம்மதத்தன் முன்னிலையில், மேல்சாந்தி பிரசாத் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபாராதனை காண்பித்தார். பின்னர் இரு முடி கட்டுகளுடன் காத்திருந்த பக்தர்கள் 18-ம் படி வழியாக சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.

கார்த்திகை 1-ந் தேதியான இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இந்த சீசனில் இன்று முதல் தினமும் 18 மணி நேரம் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வரும் நாட்களில் கட்டுக்கடங்காத கூட்டம் அலைமோதும் சூழ்நிலை உருவானால், தரிசன நேரம் அதிகரிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மண்டல சீசனின் சிகர நிகழ்ச்சியாக மண்டல பூஜை அடுத்த மாதம் 27-ந் தேதியும், மகரவிளக்கு சீசனின் முத்தாய்ப்பாக மகர ஜோதி தரிசனம் ஜனவரி 14-ந் தேதியும் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *