புதுச்சேரி:
பெண் காவலருக்கு பாலியல் தொந்தரவு அளித்த விவகாரத்தில், துணைநிலை ஆளுநரின் உத்தரவுப்படி காரைக்காலில் பணியாற்றி வந்த புதுச்சேரி எஸ்பி சுப்பிரமணியன் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
புதுச்சேரி காவல் துறையில் எஸ்.பி.யாக பணியாற்றியவர் சுப்பிரமணியன். இவர் 2024-ம் ஆண்டில் காரைக்காலில் எஸ்பியாக பணியாற்றியபோது, திருமணமான பெண் காவலர் ஒருவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் எழுந்தது. பின்னர் புதுச்சேரிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டு சென்ற போதிலும், தொடர்ந்து பெண் காவலருக்கு தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பெண் காவலரின் தாயார் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்காததால், அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். எஸ்பி மீது நடவடிக்கை எடுக்காதது குறித்து அடுத்தடுத்த விசாரணைகளில் நீதிமன்றம் தொடர்ச்சியாக கேள்வி எழுப்பியது. விசாகா குழு அறிக்கையை தாக்கல் செய்யுமாறு கேட்டது.
இந்நிலையில், புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதன் உத்தரவின்படி, கடந்த செப்.24-ம் தேதி எஸ்பி சுப்பிரமணியன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அதன் பின்னரும் அவர் மீது வழக்குப்பதிவு செய்யாதது குறித்து நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
இதையடுத்து அவர் மீது பாலியல் துன்புறுத்தல், பாலியல் சார்ந்த தவறான செய்கைகள் மூலம் பெண்களை அவமதித்தல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் காரைக்கால் நகர காவல் நிலையத்தில் செப்.28-ம் தேதி வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் நிபந்தனை முன்ஜாமீன் பெற்ற சுப்பிரமணியன், நீதிமன்ற உத்தரவுப்படி காரைக்கால் நகர காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்டு வந்தார்.
இந்நிலையில், துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் உத்தரவின்பேரில் எஸ்பி சுப்பிரமணியனை பணி நீக்கம் செய்து தலைமைச்செயலர் சரத் சவுகான் நேற்று உத்தரவிடப்பட்டுள்ளார். சுப்பிரமணியனின் பணிக்காலம் பிப்ரவரி மாதத்துடன் நிறைவடைய உள்ள நிலையில் அவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.