சென்னை:
தவெக சார்பில் இரண்டாம் கட்ட கல்வி விருது மற்றும் ஊக்கத்தொகை வழங்கும் விழா வரும் நவ.26 மற்றும் 27 தேதிகளில் நடைபெறவுள்ளது.
தவெக சார்பில் கடந்த மூன்று ஆண்டுகளாக 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பு பொதுத்தேர்வில் தொகுதிவாரியாக முதல் 3 இடங்களை பிடிக்கும் மாணவ- மாணவியர்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி, கடந்த 4-ம் தேதி சென்னையில் நடைபெற்ற முதற்கட்ட விழாவில் அரியலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் உள்ள 30 தொகுதிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு முதல்வர் விருதுகளை வழங்கினார்.
இந்நிலையில் 2-ம் கட்ட விழா நவ.18-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில் சில காரணங்களுக்காக தேதி தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த விழா நவ.26 மற்றும் 27-ம் தேதி நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதன்படி, சென்னை நீலாங்கரையில் பிற்பகல் 2.30 மணிக்குத் தொடங்கும் விழாவில், முதல்வர் விஜய் பங்கேற்று 36 தொகுதிகளின் மாணவர்களுக்கு விருதுகளையும் ஊக்கத் தொகையையும் வழங்கவுள்ளார்.
இதில் நவ.26-ம் தேதி கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களைச் சேர்ந்த தொகுதி மாணவர்களுக்கும் நவ.27-ம் தேதி சேலம், நாமக்கல், கரூர் மற்றும் திருச்சி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த தொகுதி மாணவர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட உள்ளன.
இவ்விழா ஏற்பாடுகளை முன்னின்று கவனித்து வரும் அமைச்சர் என்.ஆனந்த், சம்பந்தப்பட்ட மாவட்ட எம்எல்ஏ-க்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தி, மாணவர்களுக்கான தனி அடையாள அட்டைகள் மற்றும் பெற்றோருக்கான அனுமதிச் சீட்டுகளை வழங்கியுள்ளதாகவும், இவை மாவட்ட நிர்வாகிகள் மூலம் உரியவர்களிடம் விநியோகிக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
மாணவர்கள் மற்றும் பெற்றோரை சென்னைக்கு அழைத்து வர பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தங்குவதற்கு அறைகள் மற்றும் காலை உணவு வழங்கப்பட உள்ளது. தொடர்ந்து, பகல் 11 மணியளவில் விழா அரங்குக்கு அழைத்து வரப்பட்டு, மதிய உணவு மற்றும் சிற்றுண்டிகள் வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.