பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு 40 வேட்பாளர்கள் அடங்கிய முதல் பட்டியலை ஆம் ஆத்மி கட்சி வெளியிட்டு அறிவிப்பு!!

புதுடெல்லி:
பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு 40 வேட்பாளர்கள் அடங்கிய முதல் பட்டியலை ஆம் ஆத்மி கட்சி வெளியிட்டுள்ளது. முதல்வர் பகவந்த் மான் துரி தொகுதியில் மீண்டும் போட்டியிட உள்ளார்.

117 சட்டப்பேரவை உறுப்பினர்களைக் கொண்ட பஞ்சாப் சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு பிப்ரவரியில் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ஆளும் ஆம் ஆத்மி கட்சி 40 வேட்பாளர்கள் அடங்கிய முதல் பட்டியலை இன்று (அக். 31) வெளியிட்டுள்ளது.

அதன்படி, முதல்வர் பகவந்த் மான், துரி தொகுதியில் மீண்டும் போட்டியிட உள்ளார். ஏற்கனவே சட்டமன்ற உறுப்பினர்களாக உள்ள பலர், தாங்கள் வெற்றி பெற்ற தொகுதியில் மீண்டும் போட்டியிடுவதற்கான வாய்ப்பைப் பெற்றுள்ளனர்.

முன்னதாக, வேட்பாளர் தேர்வு குறித்த ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் உள்ள ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவாலின் இல்லத்தில் நேற்று நடைபெற்றது. இதில் அரவிந்த் கேஜ்ரிவால், பகவந்த் மான், கட்சியின் மாநில பொறுப்பாளர் மணிஷ் சிசோடியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

வேட்பாளர் பட்டியல் வெளியீட்டுக்குப் பிறகு டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய பகவந்த் மான், “இன்று நடைபெற்ற அரசியல் விவகாரக் குழு கூட்டத்தில், பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

பொதுமக்களிடையே நடத்தப்பட்ட கருத்துக்கணிப்புகளின் அடிப்படையில் மக்களிடம் நல்ல வரவேற்பபைப் பெற்றவர்கள் வேட்பாளர்களாக உறுதி செய்யப்பட்டுள்ளனர். மொத்தம் 40 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் இறுதி செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவர்கள் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று நம்புகிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

சபாநாயகர் குல்தார் சிங் சந்த்வான், கோட்கபுரா தொகுதியில் போட்டியிட உள்ளார். பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு குருகிராமில் உள்ள போண்ட்ஸி சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமைச்சர் சஞ்சீவ் அரோரா, லூதியானா மேற்கு தொகுதியிலும் போட்டியிட உள்ளார்.

தற்போது பஞ்சாப் சட்டப்பேரவையில் ஆம் ஆத்மி கட்சிக்கு 94 உறுப்பினர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *