உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலுக்காக 403 தொகுதிகளிலும் பாஜகவின் டிஜிட்டல் படை அமைகிறது; ஜென்ஸீ வாக்காளர்களை ஈர்க்க முடிவு!!

புதுடெல்லி: உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலுக்காக அதன் 403 தொகுதிகளிலும் பாஜகவின் டிஜிட்டல் படை அமைகிறது. ஒவ்வொரு சட்டப்பேரவை தொகுதியிலும் 50 சமூக ஊடக நிபுணர்கள் செல்போன் வழி பிரச்சாரம் செய்ய உள்ளனர்.

உத்தரப் பிரதேச மாநில சட்டப்பேரவை தேர்தல் அடுத்த வருடம் தொடக்கத்தில் நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் டிஜிட்டல் பிரச்சாரத்தை வலுப்படுத்த பாஜக திட்டமிட்டுள்ளது.

தேர்தல் களத்தில் வெற்றி பெற, நேரடிப் பிரச்சாரத்தை மட்டுமல்லாது டிஜிட்டல் தளத்திலும் முழு பலத்தையும் பயன்படுத்த பாஜக தயாராகி வருகிறது.

சமீப காலங்களில் தேர்தல் பிரச்சாரத்தில் சமூக ஊடகங்களின் பங்கு அதிகரித்து வருகிறது. இதைக் கருத்தில் கொண்டு, உத்தரப் பிரதேசத்தில் உள்ள 403 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நபர்களைக் கொண்ட ஒரு பெரும் படையை அக்கட்சி களமிறக்குகிறது.

சமூக ஊடகங்களின் நுணுக்கங்களை நன்கு அறிந்த தலா 50 பேர் வீதம் ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதியிலும் பணியமர்த்தப்படுவார்கள்.

இதன்மூலம், மாநிலம் முழுவதும் மொத்தம் 20,150 பேர், டிஜிட்டல் ஊடகங்கள் வழியாக பாஜகவின் கொள்கைகளையும் திட்டங்களையும் பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியைச் செய்வார்கள்.

மதுராவின் பார்க்கமில் உள்ள பண்டிட் தீனதயாள் பசு ஆராய்ச்சி மையத்தில் நடைபெற்ற பாஜகவின் இரண்டு நாள் திட்டமிடல் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தேர்தல் வியூகங்களை வகுப்பதற்கான முக்கிய கருவியாக சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு பாஜக அதிக முக்கியத்துவம் அளிக்க உள்ளது.

பொதுக்கூட்டங்கள், பேரணிகள், மக்கள் தொடர்பு மற்றும் பாரம்பரிய பிரச்சார முறைகளைத் தாண்டி, இன்று தேர்தல் களம் விரிவடைந்துள்ளதாக இந்தக் கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.

ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் தளம், யூடியூப் மற்றும் வாட்ஸ் அப் போன்ற சமூக வலைதளங்கள் பொதுக் கருத்தை உருவாக்குவதில் மிக முக்கியப் பங்காற்றுகின்றன. குறிப்பாக, ‘ஜென்ஸீ’ எனப்படும் இன்றைய இளம் தலைமுறையினரிடையே சமூக ஊடகங்கள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

அவர்கள் அரசியல் விவகாரங்கள், தலைவர்களின் கருத்துகள் மற்றும் தேர்தல் வாக்குறுதிகள் குறித்த தகவல்களை டிஜிட்டல் தளங்கள் மூலமே அறிந்துகொள்கின்றனர். இத்தகைய இளம் வாக்காளர்களைச் சென்றடைவது அரசியல் கட்சிகளுக்கு ஒரு சவாலாகவும், அதே சமயம் ஒரு வாய்ப்பாகவும் உள்ளது.

எனவே, குறுகிய காட்சிப் பதிவுகள், ரீல்ஸ்கள், இன்போகிராபிக்ஸ் மற்றும் நேரலை உரையாடல்கள் மூலம் இளைஞர்களை ஈர்க்கும் வகையில் வியூகங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன. சமீப காலங்களில், சமூக ஊடகங்கள் வாயிலாகத் தங்களின் அரசியல் இருப்பை உறுதிப்படுத்திக் கொண்ட புதிய அரசியல் குழுக்களின் செயல்பாடுகள் பாஜகவின் கவனத்தை ஈர்த்துள்ளன.

டிஜிட்டல் பிரச்சாரத்தை வெறும் தகவல் பரிமாற்றத்திற்கான கருவியாக மட்டும் பார்க்காமல், தனது மக்கள் தொடர்பு மற்றும் தேர்தல் வியூகத்தின் மிக முக்கியமான அங்கமாகவே பாஜக இப்போது கருதுகிறது.

களப்பணியாளர்கள் வாக்காளர்களைச் சந்திக்க வீடு வீடாகச் செல்லும்போது, டிஜிட்டல் குழுவினர் கட்சியின் செயல்பாடுகள், சாதனைகள் மற்றும் கருத்துகளைச் சமூக ஊடகங்கள் வாயிலாக மக்களிடம் கொண்டு சேர்ப்பார்கள்.

இதன்மூலம், வரவிருக்கும் தேர்தல்களில் நிலவும் அரசியல் போட்டி, களத்தில் மட்டுமல்லாமல், மக்களின் கைபேசித் திரைகளிலும் வெளிப்படும். இதனால், உத்தரப் பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி தொடர்ந்து மூன்றாவது முறை அமையும் என்று பாஜகவினர் எதிர்பார்க்கின்றனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *