கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினரைக் காப்பாற்ற முயன்று தற்போது தல்வர் விஜய் தோற்றிருக்கிறார் என்பதே உண்மை; நயினார் நாகேந்திரன்!!

சென்னை:
‘பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரியிடம், தவெக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் தகாத முறையில் நடந்துகொண்ட சம்பவத்தில், பலமுறை சுட்டிக்காட்டியும் நடவடிக்கை எடுக்காத தவெக அரசின் அலட்சியப் போக்கு மிகவும் தவறானது.

இந்த விவகாரத்தில் முதல்வர் விஜய் தமது கட்சியின் சட்டமன்ற உறுப்பினரைக் காப்பாற்ற முயன்று தற்போது தோற்றிருக்கிறார் என்பதே உண்மை’ என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘கள்ளக்குறிச்சி தவெக சட்டமன்ற உறுப்பினர் சி.அருள் விக்னேஷ் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாகவும், தேவையற்ற குறுஞ்செய்திகள் அனுப்பியதாகவும் குற்றச்சாட்டுகள் இருந்து வந்த நிலையில், தற்போது மாவட்ட ஆட்சியர் காவல் கண்காணிப்பாளரிடம் முறையாகப் புகார் அளித்திருக்கிறார்.

ஒரு பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கே இத்தகைய நிலை ஏற்பட்டும், நாங்கள் பலமுறை சுட்டிக்காட்டியும் இவ்வளவு நாட்களாக எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் தமிழ்நாடு அரசு அலட்சியமாக மவுனம் காத்தது ஏன்? ‘பெண்களைத் தொந்தரவு செய்தால் சும்மா இருக்க மாட்டேன்’ என்ற வாக்குறுதியை மீறி, முதல்வர் விஜய் தமது கட்சியின் சட்டமன்ற உறுப்பினரைக் காப்பாற்ற முயன்று தற்போது தோற்றிருக்கிறார் என்பதே உண்மை.

சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசுத் தரப்பு புகாரே வரவில்லை எனத் தப்பிக்கப் பார்த்த நிலையில், நீதிமன்றத்தின் கிடுக்கிப்பிடியால் மட்டுமே தற்போது உண்மை வெளிவந்துள்ளது.

நீதிபதிகள் தலையிட்டு விளக்கம் கேட்காமல் இருந்திருந்தால், ஆட்சியரின் இந்தப் புகாரும் நிச்சயமாக மூடி மறைக்கப்பட்டிருக்கும் என்பது இதன் மூலம் வெட்டவெளிச்சமாகியுள்ளது.

தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் முதல் கட்சி நிர்வாகிகள் வரை பெண்களுக்கு எதிரான அத்துமீறல்களிலும் பாலியல் குற்றங்களிலும் ஈடுபடுவது தொடர்ந்து அதிகரித்து வருவது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.

இனியும் குற்றவாளிகளைப் பாதுகாக்கும் போக்கைக் கைவிட்டு, தமிழ்நாடு பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பதியப்பட்டுள்ள இப்புகாரில் தவெக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷைக் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *