சென்னை:
சென்னை போக்குவரத்து போலீஸாருக்கு ஹோண்டா இந்தியா பவுண்டேஷன் வழங்கிய 50 பைக்குகள் மற்றும் ஒரு காரை, காவல் ஆணையர் அமல் ராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
ஹோண்டா இந்தியா பவுண்டேஷன் நிறுவனம், சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையின் அவசரகால உதவிப் பணிகளுக்காக 50 பைக்குகள் மற்றும் ஒரு காரை வழங்க முன்வந்தது.
அதன்படி, சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நேற்று காலை நடைபெற்ற நிகழ்ச்சியில், ஹோண்டா மோட்டார் சைக்கிள்ஸ் அண்ட் ஸ்கூட்டர்ஸ் இந்தியா நிறுவனத்தின் செயல்பாட்டு அதிகாரி பிரபு நாகராஜ் முன்னிலையில், காவல் ஆணையர் அமல்ராஜ் வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், கூடுதல் காவல் ஆணையர்கள் கபில் குமார் சி. சரத்கர், சாமுண்டீஸ்வரி (போக்குவரத்து) போக்குவரத்து இணை ஆணையர் பகலவன் மற்றும் காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் காவல் ஆணையாளர் அமல்ராஜ் கூறியதாவது: சென்னையில் போக்குவரத்தைச் சீரமைக்கவும், அவசரகால உதவிப் பணிகளை விரைவுபடுத்தவும் தற்போது வழங்கப்பட்டுள்ள புதிய வாகனங்கள் பயன்படுத்தப்படும்.
சென்னையில் கடந்த 10 மாதங்களில் சாலை விபத்துகளில் 420 பேர் இறந்துள்ளனர். இந்த ஆண்டு சாலை விபத்து உயிரிழப்பு 402 ஆக குறைந்துள்ளது.
ஹெல்மெட் அணியாதது தொடர்பாக இந்த ஆண்டு இதுவரை 4 லட்சத்து 85 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இருசக்கர வாகன விபத்து ஏற்படும்போது ஹெல்மெட் அணியாததால்தான் அதிக உயிரிழப்பு ஏற்படுகிறது. எனவே, பைக்கில் செல்வோர் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும்.