சென்னை:
மக்கள் பிரதிநிதிகள் எழுப்பிய கேள்விகளுக்கு 10 நாட்களுக்குள் எழுத்துப்பூர்வமாக பதில் அளிக்க வேண்டும் என்று பல்துறை அதிகாரிகளுக்கு தயாநிதி மாறன் எம்.பி. உத்தரவிட்டார்.
சென்னை மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம், குழுவின் தலைவர் மத்திய சென்னை எம்.பி. தயாநிதி மாறன் தலைமையில் ரிப்பன் மாளிகை வளாகத்தில் நேற்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில், சென்னை மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் அம்ருத் 2.0, ஸ்மார்ட் சிட்டி மிஷன், நிர்பயா நிதி திட்டம், தூய்மை இந்தியா இயக்கம், தேசிய நகர்ப்புற சுகாதார இயக்கம், தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டம், மெட்ரோ ரயில் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் முன்னேற்றம் குறித்து அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அப்போது, சென்னையில் மெட்ரோ ரயில் பணிகளால் ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என தயாநிதி மாறன் கேள்வி எழுப்பினார். இதற்கு மெட்ரோ ரயில் நிறுவன பொதுமேலாளர் பதில் அளித்தார்.
இதற்கு கோபமடைந்த தயாநிதி மாறன், மத்திய அரசு சார்பில் நடைபெறும் கூட்டத்தில், மெட்ரோ ரயில் நிர்வாக இயக்குநர் எங்கே என கேள்வி எழுப்பினார். பின்னர் மாவட்ட ஆட்சியரை அழைத்து, அடுத்த கூட்டத்தில் மெட்ரோ ரயில் நிர்வாக இயக்குநர் கட்டாயம் பங்கேற்க வேண்டும்.
போக்குவரத்து நெரிசல் தொடர்பாக மாநகராட்சி மீது பழிபோடக்கூடாது. இது தொடர்பாக விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என அறிவுறுத்தினார்.
இதையடுத்து காங்கிரஸ் எம்.பி. பிரவீன் சக்ரவர்த்தி, சென்னையில் ஸ்மார்ட் வகுப்பறை திட்டத்தில் ரூ.63 கோடி ஒதுக்கப்பட்டு, ரூ.1.5 கோடி மட்டுமே செலவிடப்பட்டுள்ளதாக கூறினார். எஞ்சிய தொகை ஏன் செலவிடப்படவில்லை என்பது உட்பட பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.
இறுதியாக, இக்கூட்டத்தில் மக்கள் பிரதிநிதிகள் எழுப்பிய அனைத்து கேள்விகளுக்கும் 10 நாட்களுக்குள் எழுத்துப்பூர்வமாக பதில் அளிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு தயாநிதி மாறன் உத்தரவிட்டார்.
இக்கூட்டத்தில் மேயர் பிரியா, எம்.பி.க்கள், கலாநிதி வீராசாமி, பி.வில்சன், கிரிராஜன், பிரவீன் சக்ரவர்த்தி, எம்எல்ஏக்கள் சேகர்பாபு, பல்லவி, துணை மேயர் மகேஷ்குமார், மாநகராட்சி ஆணையர் ஜி.எஸ்.சமீரன், சென்னை மாவட்ட ஆட்சியர் மாலதி ஹெலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.