”அனைத்து வளமும் தரும் ஆடித்தபசு”!!

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் வேறு எந்த ஒரு கோவிலிலும் இல்லாத ஒரு சிறப்பு உள்ளது. இங்கு இருக்கும் நாகராஜர் கோவில் பாம்பு புற்றை சுற்றி கோவில் எழுப்பி இருக்கிறார்கள்.

நாகதோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து பழம், பால் படைத்து வணங்கி செல்கின்றனர். அவரவர் வாழ்க்கையில் நினைத்த காரியங்கள் தடையின்றி நடைபெறுவதாக சொல்கிறார்கள்.

இந்த தலத்தில் உள்ள புற்று மண் மிகவும் விசேஷமானது. பல சரும நோய்களை குணமாக்க வல்ல மண் என்று பக்தர்கள் நம்புகிறார்கள். இந்த புற்றில் இருந்து மண்ணை எடுத்து அருகிலுள்ள தொட்டியில் போட்டிருக்கிறார்கள்.

அம்பாள் சன்னதியிலும் புற்று மண் இருக்கிறது. இந்த மண்ணை சிலர் மருந்தாக சாப்பிட்டு வருகிறார்கள். நெற்றியிலும் இதை திலகமாக வைத்துக் கொள்கிறார்கள்.

இந்த கோவில் அற்புதங்களுக்கெல்லாம் சிகரமாக விளங்குவது சங்கர நாராயண சுவாமி சிலை. காரணம் ஒரே சிலையில், ஒரு பாதி சிவனும், மறுபாதி விஷ்ணுவும் போன்ற தோற்றம் உடையது. தலையில் கங்கையை முடிந்து இருக்கிறார். ரத்ன கிரீடம் சூடியிருக்கிறார். கழுத்தில் ருத்திராட்ச மாலை அணிந்திருக்கிறார். இடுப்பில் புலித்தோல் கட்டியிருக்கிறார். இவை அனைத்தும் சிவனின் வடிவங்கள்.

மறுபாதியில் தலையில் கிரீடம், காதில் மசியக் குண்டலம், கையில் சங்கு, சிம்மகரணம், இடுப்பில் பட்டு பீதாம்பரம் இருக்கிறது. இந்த வடிவம் விஷ்ணுவின் வடிவமாகும். எனவே சிவனும், விஷ்ணுவும் சேர்ந்திருப்பதால் சங்கரநாராயண சுவாமி என்கிறார்கள்.

ஒருமுறை பார்வதி தேவியாருக்கு சிவன் பெரியவரா? விஷ்ணு பெரியவரா? என்று சந்தேகம் வந்துவிட்டது. அதை சிவனிடம் நேரடியாகவே கேட்டுவிட்டார். உடனே சிவபெருமான் பாதி சிவனாகவும், பாதி விஷ்ணுவாகவும் தோன்றினார்.

உடனே சிவனார், பெரியவர் யார், சிறியவர் யார் என்பது பார்ப்பவர் கண்ணில் தான் உள்ளது. இரண்டு பேருமே ஒன்று தான் என்று விளக்கமும் கூறினார். இதை உணர்த்தும் விழா, சங்கரன் கோவிலில் காட்சி அளிக்கும் ஈசனை காண தேவி புறப்பட்டு வரும் வைபவமாக ஆடித்தபசு எனும் நிகழ்வாக கொண்டாடப்படுகிறது.

அம்பாள் தவக் கோலத்தில் காணப்படுகிறார். அம்பாள் சன்னதியை சுற்றி உள்ள கிரிவீதியை 108 முறை சுற்றினால் நினைத்தது நடக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது இத்தலத்தின் அசைக்க முடியாத நம்பிக்கை.

அதுவும் ஆடித்தபசுக்கு முன்பு சுற்ற வேண்டும். ஆடித்தபசு ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் உத்திரட்டாதி நட்சத்திரத்தன்று நடந்தேறுகிறது.

பொதுவாக சிவன் அபிஷேகப்பிரியர். விஷ்ணு அலங்காரப் பிரியர். ஆனால் சங்கரன்கோவிலில் இருவரும் ஒரே சிலையாக அமைந்திருப்பதால் அதற்கு அபிஷேகம் செய்வது சிரமமாக இருந்தது. இதையறிந்த ஆதிசங்கரர் தாம் வைத்திருந்த ஸ்படிகலிங்கத்தை கோவிலுக்கு கொடுத்து அதற்கு அபிஷேகம் செய்யுமாறு கூறினார்.

இந்த லிங்கத்தை தண்ணீரில் போட்டால் லிங்கம் இருப்பதே தெரியாது. இது ஒரு இயற்கை அற்புதமாகும். அதுபோல் சங்கர நாராயண சந்நிதியில் வனக்குழி என்ற ஒரு பள்ளம் உள்ளது. இதில் சாமியை பிரதிஷ்டை செய்திருப்பதாக ஒரு ஐதீகம். எனவே பேய் மற்றும் பில்லி சூனியத்திற்கு ஆளான பலர் இந்த வனக்குழியில் அமர்ந்து பூஜை செய்வார்கள்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *