மாநில உரிமைகளைப் பாதுகாக்க ஓய்வு பெற்ற நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் உயர்நிலைக் குழு அமைக்கப்படும் – தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!!

சென்னை:
மாநில உரிமைகளைப் பாதுகாக்க ஓய்வு பெற்ற நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் உயர்நிலைக் குழு அமைக்கப்படும் என தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

மாநில சுயாட்சி தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் இன்று (ஏப்.15) விதி எண் 110-ன் கீழ் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.

அதனை வெளியிட்டு அவர் கூறியதாவது: மாநிலங்களின் நியாயமான உரிமைகளைப் பாதுகாக்க உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் உயர்நிலைக் குழு ஒன்று அமைக்கப்படுகிறது.

இந்தக் குழுவின் இடைக்கால அறிக்கை வரும் ஜனவரி 2026-ல் சமர்ப்பிக்கப்படும். இறுதி அறிக்கை இரண்டு ஆண்டுகளில் சமர்ப்பிக்கப்படும். இக்குழு மாநில உரிமைகளை மீட்டெடுப்பதற்கான பரிந்துரைகளை அரசுக்கு வழங்கும்.

மாநில பட்டியலில் உள்ள கல்வி, மருத்துவம், சட்டம், நிதி ஆகியவற்றை மத்திய அரசு மடைமாற்றம் செய்ய முயற்சி செய்து வருகிறது. மருத்துவக் கொள்கையை நீட் தேர்வு நீர்த்துபோகச் செய்துள்ளது.

நீட் தேர்வு காரணமாக பல மாணவர்களின் மருத்துவக் கனவு சிதைந்து போயுள்ளது. இதனால் பல மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.

மேலும், மும்மொழிக் கொள்கை என்ற போர்வையில் இந்தியை திணிக்க முயற்சி நடக்கிறது.

ஜிஎஸ்டியை கொண்டு வந்தபோதே தமிழ்நாடு அதற்குக் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தது. மத்திய அரசின் ஜிஎஸ்டி முறையால் மாநில அரசுகளுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இவ்வாறாக மாநில உரிமைகள் ஒவ்வொன்றாக பறிக்கப்பட்டு வருகின்றன.

மாநில உரிமைகளுக்கான முதல் குரல் தமிழகத்தில் இருந்துதான் ஒலிக்கத் தொடங்கும். அந்த வகையில் மாநிலங்களின் நியாயமான உரிமைகளை பாதுகாக்க ஓய்வு பெற்ற நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் குழு அமைக்கப்படும்.

அனைத்து மாநிலங்களின் நலன் கருதி இந்த உயர்மட்ட குழு அமைக்கப்படுகிறது. இதில் ஓய்வுபெற்ற முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி அசோக் வர்தன், திட்டக்குழு முன்னாள் தலைவர் நாகநாதன், ஆகியோர் குழுவின் உறுப்பினர்களாக இருப்பர்.

இந்தக் குழுவின் இடைக்கால அறிக்கை வரும் ஜனவரி 2026-ல் சமர்ப்பிக்கப்படும். இறுதி அறிக்கை இரண்டு ஆண்டுகளில் சமர்ப்பிக்கப்படும். இவ்வாறு முதல்வர் சட்டப்பேரவையில் அறிவித்தார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *