”சதுரகிரியில் கோடை காலத்தை முன்னிட்டு பக்தர்களுக்கு குடிநீர் வசதியை செய்து தர வேண்டும் என கோரிக்கை”!!

வத்திராயிருப்பு:
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் பிரசித்தி பெற்ற சுந்தர, சந்தன மகாலிங்கம் கோவில் உள்ளது. இங்கு கடந்த மாதம் வரை மாதத்தில் 8 நாட்கள் மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு வந்தது.

அதன்பின் மதுரை ஐகோர்ட்டு சதுரகிரிக்கு செல்ல பக்தர்களுக்கு தினமும் அனுமதி அளிக்கலாம் என உத்தரவிட்டது.

அதன்படி கடந்த ஒரு மாதமாக பக்தர்கள் தினமும் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். மழை நாட்களில் மட்டும் பக்தர்கள் செல்ல வனத்துறை தடை விதித்து வருகிறது.

இந்த நிலையில் சித்திரை மாத பிரதோஷம் (இன்று), 27-ந்தேதி அமாவாசை முன்னிட்டு இன்று பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் அடிவாரமான தாணிப்பாறையில் குவிந்தனர்.

காலை 6.30 மணிக்கு நுழைவு வாயில் திறக்கப் பட்டது. வனத்துறையினர் உடைமைகளை சோதனை செய்த பின் பக்தர்கள் மலையேற அனுமதிக்கப் பட்டனர்.

சிறுவர்கள், பெண்கள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வத்துடன் சுமார் 3 முதல் 4 மணி நேரம் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்தனர்.

கடும் வெயிலால் பக்தர்கள் சிரமமடைந்தனர். மலை பகுதிகளில் போதிய குடிநீர் வசதி செய்து தரப்படவில்லை என கூறப்படுகிறது.


எனவே கோடை காலத்தை முன்னிட்டு பக்தர்களுக்கு குடிநீர் வசதியை செய்து தர வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

பிரதோஷத்தை முன்னிட்டு இன்று மாலை சுந்தர மகாலிங்கத்துக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெறுகிறது.

இதற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் ராஜா என்ற பெரியசாமி, செயல் அலுவலர் ராமகிருஷ்ணன் ஆகியோர் செய்துள்ளனர்.

நாளை மறுநாள் அமாவாசை மற்றும் விடுமுறை நாட்கள் என்பதாலும் பக்தர்களின் வருகை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *