சென்னை:
இந்திய கிரிக்கெட் அணியின் 3 நிலைக்கும் (டெஸ்ட், ஒருநாள் போட்டி, 20 ஓவர்) ரோகித் சர்மா கேப்டனாக பணியாற்றி வந்தார்.
20 ஓவர் உலக கோப்பையை வென்ற பிறகு ரோகித் சர்மா அதில் இருந்து ஓய்வு பெற்றார். இதனால் சூர்யகுமார் யாதவ் 20 ஓவர் அணிக்கு கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.
இந்த நிலையில் ரோகித் சர்மா டெஸ்டில் இருந்து ஓய்வு பெறுவதாக திடீரென அறிவித்தார். அதே நேரத்தில் ஒருநாள் போட்டியில் தொடர்ந்து விளையாடுவேன் என்று தெரிவித்தார்.
ரோகித் சர்மா ஓய்வு பெற்றதால் இந்திய டெஸ்ட் அணிக்கு புதிய கேப்டனாக யார்? நியமிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது.
இந்திய அணி ஜூன் மாதம் முதல் ஆகஸ்ட் வரை இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 டெஸ்டில் விளையாடுகிறது.
அடுத்த மாதம் 20-ந் தேதி டெஸ்ட் தொடர் தொடங்குகிறது. இந்த தொடருக்கு புதிய கேப்டனை தேர்வு செய்ய வேண்டிய நிலை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு உள்ளது.
வேகப்பந்து வீரர் ஜஸ்பிரீத் பும்ராவை டெஸ்ட் கேப்டனாக நியமிக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் அவர் டெஸ்ட் கேப்டன் பதவியில் இருக்க விருப்பம் இல்லை என்று தெரிவித்து விட்டார்.
5 டெஸ்ட் முழு வதும் தன்னால் கேப்டனாக செயல்பட இயலாது என்று பும்ரா தேர்வு குழுவினரிடம் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதனால் டெஸ்ட் கேப்டன் பதவிக்கான போட்டியில் சுப்மன் கில் – ரிஷப் பண்ட் ஆகியோருக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இதில் சுப்மன் கில்லுக்கு தான் அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.