கோவை,
கோவை காந்திபுரம் மத்திய சிறைச்சாலை பகுதியில் 45 ஏக்கரில் செம்மொழி பூங்கா அமைக்க கடந்த 2023-ம் ஆண்டு டிசம்பர் மாதம் அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த பணிக்காக முதலில் ரூ.167.25 கோடி, தற்போது கூடுதலாக ரூ.47 கோடி என மொத்தம் ரூ 214.25 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து பூங்கா அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்றது. பூங்கா முகப்பில் செயற்கை மலைக்குன்றுகள், அதில் நீர் வீழ்ச்சி, வன விலங்குகள் நடமாடுவது போன்றும் சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டு உள்ளன. அதன் வழியாக செல்வது பார்வையாளர்களுக்கு புதிய அனுபவத்தை அளிக்கும் வகையில் அமைக்கப்பட்டு உள்ளது.
பூங்காவில் கடையேழு வள்ளல்களின் சிலைகள், 23 வகையான பூந்தோட்டம், ஆயிரம் வகை ரோஜா செடிகள், தென் அமெரிக்க நாடுகளில் இருந்து வரவழைக்கப்பட்ட அரிய வகை மரங்கள் மற்றும் பலவித கற்றாழைகள் நடவு செய்யப்பட்டு உள்ளன.
செம்மொழி பூங்காவில் 1,000 பேர் அமரக்கூடிய இருக்கை வசதியுடன் மாநாட்டு மையம், வாகனங்களை நிறுத்தும் வளாகம் அமைக்கப்பட்டு உள்ளது.
கோவை மாநகர மக்களின் பொழுதுபோக்கு மையமாக விளங்க உள்ள செம்மொழி பூங்காவை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 26-ந் தேதி தொடங்கி வைக்க இருப்பதாக முதலில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதைத்தொடர்ந்து கடந்த 15-ந் தேதி நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, செம்மொழி பூங்கா பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது, செம்மொழி பூங்காவில் மொத்தம் 23 பணிகள் முடிந்து விட்டன.
4 பணிகள் மட்டும் மீதி உள்ளது. திறப்பு விழா தேதியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பார் என்று கூறினார். இதைத்தொடர்ந்து 26-ந் தேதிக்கு பதிலாக ஒரு நாள் முன்கூட்டியே 25-ந் தேதி செம்மொழி பூங்கா திறக்கப்பட உள்ளது.
அதன்படி முதல் – அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 25-ந் தேதி கோவை வந்து செம்மொழிப் பூங்காவை திறந்து வைக்கிறார். எனவே பூங்காவில் இறுதிக்கட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.