திருநெல்வேலி:
திருநெல்வேலி மாவட்டத்தில் பெய்துவரும் கன மழையால் இதுவரை 1 லட்சம் வாழைகள் சேதமடைந்துள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. தொடர்ந்து பயிர் சேதம் கணக்கிடப்பட்டு வருகிறது என்று மாவட்ட ஆட்சியர் ஆர். சுகுமார் தெரிவித்தார்.
திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: திருநெல்வேலி மாவட்டத்துக்கு 23, 24-ம் தேதிகளில் மிக கன மழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கையை சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
இதனால் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளில் உதவிடும் பொருட்டு திருநெல்வேலி மாவட்டத்துக்கு 26 வீரர்கள் அடங்கிய மாநில பேரிடர் மீட்பு படை வந்துள்ளது. மேலும் தேசிய பேரிடர் மீட்பு குழு வீரர்கள் 28 பேர் தயார் நிலையில் உள்ளனர்.
வெள்ளப் பெருக்கால் ஏற்படும் பேரிடரிலிருந்து மக்களை பாதுகாக்க தேசிய பேரிடர் மீட்புக் குழுவினரும், மாநில பேரிடர் மீட்புக் குழுவினரும் ஒருங்கிணைந்து செயல்பட தயார் நிலையில் உள்ளனர்.
இதுதவிர தீயணைப்பு வீரர்கள், பாம்பு பிடிப்பவர்கள், மீட்பு படகுகள், ஜேசிபி இயந்திரங்கள், மணல் மூட்டைகள், மரம் அறுக்கும் இயந்திரங்கள் போன்ற மீட்பு உபகரணங்களுடன் தயார் நிலையில் உள்ளனர்.
மழை நேரங்களில் நீர் நிலைகளுக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம். கால்நடைகளும் செல்லாதவாறு கால்நடை வளர்ப்போர் பார்த்துக் கொள்ள வேண்டும்.
மாவட்ட நிர்வாகம் தெரிவிக்கும் வழிமுறைகளை பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டும். மழை குறித்து பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை.
அவசர காலங்களில் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ள கட்டணமில்லா தொலைபேசி எண்.1077 மற்றும் தொலைபேசி எண். 0462-2501070 ஆகியவற்றை தொடர்புகொண்டு எந்த நேரத்திலும் தகவல் தெரிவிக்கலாம்.
மேலும், வணக்கம் நெல்லை 9786566111 என்ற வாட்ஸ் அப் எண்ணிலும் தகவல் தெரிவிக்கலாம். 24 மணி நேரமும் பேரிடர்கால அவசர கட்டுப்பாட்டு மையம் செயல்படும்.
மாவட்டத்தில் மழையால் பாதிப்புகள் ஏற்படும் என்று கண்டறியப்பட்டுள்ள 72 இடங்களில் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
1 லட்சம் வாழைகள் சேதம்: மழை குறித்து தவறான தகவல்களை பரப்ப வேண்டாம். தவறான தகவல்கள் பரப்புபவர்கள் மீது மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்பை தடுக்க மாவட்ட நிர்வாகம் எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
தாமிரபரணி ஆற்றில் காலை நிலவரப்படி 19 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. சேரன்மகாதேவி வட்டாரத்தில் கனமழை மற்றும் சூறைக்காற்றால் 1 லட்சம் வாழைகள் சேதமடைந்துள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.
இப்பகுதியில் சேத விவரம் குறித்து வருவாய்த்துறை மற்றும் வேளாண்மைத்துறை அதிகாரிகள் கணக்கெடுப்பு நடத்தி வருகிறார்கள்.
வெள்ள நீர் கால்வாயில் 5 இடங்களில் உடைப்பு ஏற்பட்டது கண்டறியப்பட்டிருந்தது. அந்த இடங்கள் சீரமைக்கப்பட்டுள்ளன. தற்போது முழு அளவில் கால்வாயில் தண்ணீர் வரும் நிலையில் எந்த இடத்திலும் உடைப்பு ஏற்படவில்லை என தெரிவித்தார்.