திருவண்ணாமலையில் 14-ந்தேதி தி.மு.க. இளைஞரணி மாநாடு – 2026 சட்டசபை தேர்தலில் தி.மு.க.வின் வெற்றியை நிச்சயம் உறுதி செய்யும் – முக்கிய அறிவிப்புகளை வெளியிடுகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!!

தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டசபை பொதுத்தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி இலக்கை முன் வைத்து வியூகம் வகுத்து செயல்படுகிறார்.

தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்களே உள்ள நிலையில் தி.மு.க.வில் வாக்குச்சாவடி முகவர்களை முழுமையாக நியமித்து அவர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளையும் வழங்கி உள்ளார்.

இப்போது வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் நடைபெறுவதால் அதில் விடுபடும் வாக்காளர்களை கண்டறிந்து அவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளார்.

அதுமட்டுமின்றி என் வாக்குச்சாவடி-வெற்றி வாக்குச்சாவடி என்று அறிவித்து கடுமையாக உழைக்க வேண்டும் என்று தி.மு.க.வினருக்கு கட்டளையிட்டுள்ளார். ஒவ்வொரு வீடுகளுக்கும் சென்று திராவிட மாடல் அரசின் சாதனைகள் அடங்கிய துண்டறிக்கைகள் வழங்கப்பட வேண்டும் என்றும் கூறி உள்ளார்.

அவ்வாறு வீடு வீடாக செல்லும் பூத் கமிட்டி குழுக்களில் கட்டாயம் மகளிர் இடம் பெற வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளார்.


இதன் அடிப்படையில் கட்சி நிர்வாகிகள் இப்போது வீடு வீடாக சென்று தி.மு.க.வின் சாதனைகளை எடுத்து சொல்லி வருகிறார்கள்.


இந்த நிலையில் தி.மு.க.வின் இளைஞரணி மாநாட்டை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருவண்ணாமலையில் வருகிற 14-ந்தேதி நடத்துகிறார்.

தேர்தலுக்கு முன்னோட்டமாக நடத்தப்படும் இந்த மண்டல மாநாட்டில் வட மாவட்டங்களில் உள்ள 91 சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட 1 லட்சத்து 30 ஆயிரம் இளைஞரணி நிர்வாகிகள் பங்கேற்க இருக்கிறார்கள்.


இந்த மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரையாற்ற உள்ளார். அப்போது சட்டசபை தேர்தல் தொடர்பாக கட்சியினருக்கு முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் என தெரிகிறது.


தி.மு.க. கூட்டணிக்கு மேலும் 2 கட்சிகள் வரும் என்று எதிர்பார்க்கப்படும் சூழலில் அதையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெளிவுப்படுத்துவார் என தெரிகிறது.

தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் இடம் பெற்றிருந்தாலும், த.வெ.க. கட்சியுடன் காங்கிரஸ் ரகசியமாக பேசி வருவது பற்றியும் இந்த மாநாட்டில் அவர் தனது கருத்துக்களை வெளிப்படுத்துவார் என தெரிகிறது.


பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு சேலத்தில் தி.மு.க. இளைஞரணி மாநாடு நடத்தப்பட்டது. அது தி.மு.க.வின் வெற்றியை முடிவு செய்தது. அதேபோல் திருவண்ணாமலையில் இளைஞரணி மண்டல மாநாடு நடத்தப்படுகிறது.

இது 2026 சட்டசபை தேர்தலில் தி.மு.க.வின் வெற்றியை நிச்சயம் உறுதி செய்யும் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


இதற்காக இளைஞரணி மண்டல மாநாட்டை பிரமாண்டமாக நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *