புதுடெல்லி:
சட்டங்களும் விதிமுறைகளும் அமைப்பை சரிசெய்வதற்காக உருவாக்கப்படுகின்றன. ஆனால் அவை மக்களை துன்புறுத்துவதாக இருக்கக் கூடாது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) பைலட் உள்ளிட்ட விமான ஊழியர்களின் பணிநேர வரம்பு (எப்டிடிஎல்) விதிகளை கடந்த ஆண்டு வெளியிட்டது.
பைலட்களின் இரவுப் பணி நேரத்தை குறைக்கவும் ஓய்வு நேரத்தை அதிகரிக்கவும் வகை செய்யும் இந்த விதிகள் கடந்த நவம்பர் மாதம் முழு அளவில் அமலுக்கு வந்தது. இதனால் ஊழியர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டு இண்டிகோ நிறுவன விமான சேவை பாதிக்கப்பட்டது.
கடந்த ஒரு வாரமாக ஆயிரக்கணக்கான இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால் பயணிகள் அவதிக்குள்ளாயினர். இதையடுத்து, புதிய விதிகள் தற்காலிகமாகநிறுத்தி வைக்கப்பட்டது. ஆனாலும், இண்டிகோ விமான சேவை இன்னும் சீராகவில்லை. நேற்றும் பல வழித்தடங்களில் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
இந்நிலையில், தேசிய ஜனநா யக கூட்டணி (என்டிஏ) எம்.பி.க்கள் கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நேற்று நடைபெற்றது.
இந்தக் கூட்டத்துக்குப் பிறகு நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பிஹார் தேர்தலில் என்டிஏ கூட்டணி வெற்றி பெற்றதற்காக பிரதமர் மோடிக்கு கூட்டணிக் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். எம்.பி.க்கள் தங்கள் தொகுதி நலனுக்காக பாடுபட வேண்டும் என்று பிரதமர் கேட்டுக்கொண்டார்.
பொதுமக்களின் வாழ்க்கையை எளிதாக்கவும் அவர்கள் பிரச்சினையின்றி வாழ்வதை உறுதி செய்யவும் அனைத்து துறைகளிலும் சீர்திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டியது அவசியம் என்று அவர் வலியுறுத்தினார்.
இண்டிகோ விமான சேவையில் ஏற்பட்ட குளறுபடி குறித்து பிரதமர் மோடி கவலை தெரிவித்தார். சட்டங்களும் விதிமுறைகளும் அமைப்பை சரிசெய்வதற்காக உருவாக்கப்படுவதாகவும் அவை மக்களை துன்புறுத்துவதற்காக அல்ல என்றும் அவர் தெரிவித்தார். இவ்வாறு கிரண் ரிஜிஜு தெரிவித்தார்.
இண்டிகோதான் பொறுப்பு: நாடாளுமன்ற மக்களவையில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு பேசும்போது, “இண்டிகோ விமான சேவையில் ஏற்பட்ட குளறுபடிக்கு அந்த நிறுவனம்தான் பொறுப்பேற்க வேண்டும். அதேநேரம் அந்நிறுவனத்தின் விமான சேவை வேகமாக சீரடைந்து வருகிறது.
ரத்து செய்யப்பட்ட விமானங்களில் முன்பதிவு செய்திருந்த பயணிகளின் கட்டணங்கள் மற்றும் அவர்களது உடமைகளை திருப்பித் தர உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அதை அரசு கண்காணித்து வருகிறது.
மேலும் இண்டிகோ விமான நிறுவனத்தின் உயர் அதிகாரிகளிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
இதன் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பயணிகளின் வசதி மற்றும் கண்ணியத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
மேலும் நாட்டின் விமான போக்குவரத்துத் துறையை, பயணிகளின் வசதியை மையமாகக் கொண்டதாக மாற்ற நீண்டகால நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
பெரிய நிறுவனமாக இருந்தாலும் சிறிய நிறுவனமாக இருந்தாலும் பயணிகளுக்கு சிரமம் ஏற்படுத்துவதை அரசு அனுமதிக்காது. மற்ற அனைத்து விமான நிறுவனங்களும் சீராக இயங்கி வருகின்றன. விமான நிலையங்கள் இயல்புநிலைக்கு திரும்பி வருகின்றன” என்றார்.
10% விமான சேவையை குறைக்க இண்டிகோ நிறுவனத்துக்கு உத்தரவு: இண்டிகோ விமான நிறுவனம் இதுவரை உள்நாடு, வெளிநாடு என தினமும் 2,300-க்கும் மேற்பட்ட விமானங்களை இயக்கி வந்தது.
இந்நிலையில்,கடந்த சில நாட்களாக இண்டிகோ விமான சேவை பாதிக்கப்பட்டது. இதையடுத்து, 10 சதவீத விமான சேவையை குறைக்க வேண்டும் என இண்டிகோ நிறுவனத்துக்கு மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
இதன்மூலம் அந்நிறுவனம் 230 விமான சேவைகளை குறைக்க வேண்டி இருக்கும். இதுதவிர மேலும் சில நடவடிக்கைகள் அந்நிறுவனம் மீது எடுக்கப்படும் எனத் தெரிகிறது.
இண்டிகோ விமான சேவை குறைக்கப்பட்ட நிலையில், அதை ஈடுகட்டும் வகையில் மற்ற விமான நிறுவனங்களுக்கு கூடுதல் விமானங்களை இயக்க அனுமதி வழங்கப்பட உள்ளது.
1,800 விமானங்கள் இயக்கம்: இதனிடையே, இண்டிகோ நிறுவன சிஇஓ பீட்டர் எல்பர்ஸ் நேற்று கூறும்போது, “இண்டிகோ விமான சேவை இயல்புநிலைக்கு திரும்பி வருகிறது. கடந்த 5-ம் தேதி 700 விமானங்கள் இயக்கப்பட்ட நிலையில், 6-ம் தேதி 1,500, 7-ம் தேதி 1,650, 8-ம் தேதி 1,800 விமானங்கள் இயக்கப்பட்டன.
இன்று (நேற்று) அனைத்து 138 வழித்தடங்களிலும் 1,800-க்கும் கூடுதலான விமானங்கள் குறித்த நேரத்தில் இயக்கப்படுகின்றன. கடந்த கால பிரச்சினைகளை ஆராய்ந்து அதை சரிசெய்து மீண்டும் வலிமை பெறுவோம்” என்றார்.