புதிதாக 125 மின்சாரப் பேருந்துகள் சேவையை தொடக்கி வைத்த உதயநிதி ஸ்டாலின்!

பூந்தமல்லி மின்சாரப் பேருந்து பணிமனை மற்றும் புதிதாக 125 புதிய தாழ்தள மின்சாரப் பேருந்துகளின் சேவையை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று(வெள்ளிக்கிழமை) கொடியசைத்து தொடக்கி வைத்தார்.

சுற்றுச்சூழல் பாதிப்புகளை தவிர்க்கும் விதமாக, தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, எரிபொருள் செலவைக் குறைக்கும் வகையிலும் காற்று மாசைக் கட்டுப்படுத்தும் வகையிலும் டீசலில் இயங்கும் பேருந்துகளுக்கு மாற்றாக, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாமல், இயற்கை எரிவாயு மற்றும் மின்சாரப் பேருந்துகளை இயக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதற்காக உலக வங்கியின் உதவியுடன், மொத்த விலை ஒப்பந்தத்தில், 1,225 மின்சார பேருந்துகளை வாங்க தமிழ்நாடு அரசால் முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதில், முதற்கட்டமாக, அசோக் லெலண்ட் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஓம் குளோபல் மொபிலிட்டி நிறுவனத்திடமிருந்து 625 பேருந்துகளை வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டது.

இந்நிலையில் முதற்கட்டமாக கடந்த ஜூன் மாதம் 30-ஆம் தேதி ரூ. 208 கோடியில் 120 புதிய தாழ்தள மின்சாரப் பேருந்துகளின் சேவையை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

பேருந்துகளை மின்னேற்றம் செய்வதற்கான கட்டுமானப் பணிகள், பராமரிப்புக் கூடம் உள்ளிட்ட வசதிகளுடன் ரூ.47.50 கோடியில் மேம்படுத்தப்பட்ட மின்சாரப் பேருந்து பணிமனையை வியாசர்பாடியில் திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து மேலும் 135 மின்சாரப் பேருந்துகள் சேவை பெரும்பாக்கம் பணிமனையிலிருந்து இயக்கப்பட்டன.

இந்த நிலையில் மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் பூந்தமல்லி பேருந்து பணிமனை ரூ. 43.53 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட மின்சாரப் பேருந்து பணிமனையாக மாற்றப்பட்டது. இந்த பணிமனையில் உரிய கட்டட உள்கட்டமைப்பு, பேருந்துகளுக்கு மின்னேற்றம் செய்வதற்கு 25 சார்ஜிங் பாய்ண்ட் அமைப்பு, பராமரிப்புக் கூடம், அலுவலக நிர்வாகக் கட்டடம், பணியாளர்கள் ஓய்வறை ஆகியவை புதுப்பிக்கப்பட்டும், புதிய மின்மாற்றிகள் பொருத்துதல் மற்றும் தீயணைக்கும் பாதுகாப்பு உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும் 3-ஆம் கட்டமாக ரூ. 214.50 கோடி மதிப்பிலான 45 புதிய தாழ்தள மின்சார குளிர்சாதனப் பேருந்துகள், 80 புதிய தாழ்தள மின்சாரப் பேருந்துகள் என 125 பேருந்துகள் இயக்க முடிவு செய்யப்பட்டது.


இந்த நிலையில் மேம்படுத்தப்பட்ட புதிய மின்சாரப் பேருந்து பணிமனை திறப்பு விழா மற்றும் 125 தாழ்தள மின்சாரப் பேருந்துகளை இயக்கி வைக்கும் நிகழ்ச்சி பூந்தமல்லி பணிமனையில் இன்று காலை (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தலைமை வகித்தார். சிறுபான்மையினர் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர், போக்குவரத்துத்துறை அரசு முதன்மைச் செயலாளர் சுன்சோங்கம் ஜடக் சிரு, மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் த.பிரபுசங்கர், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர், மு.பிரதாப் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு, புதிய பணிமனையை திறந்து வைத்தார்.

அதனைத் தொடர்ந்து 3-வது கட்டமாக பூந்தமல்லி பணிமனையில் இருந்து 125 மின்சார பேருந்துகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் அவர் மின்சாரப் பேருந்தில் ஏறி பயணம் செய்தார்.

முன்னதாக பூந்தமல்லிக்கு வருகை தந்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு பூந்தமல்லி நகர திமுக சார்பில் நகர செயலாளர் ஜி.ஆர். திருமலை தலைமையிலும், பூந்தமல்லி கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் ஒன்றியச் செயலாளர் ப.ச. கமலேஷ் தலைமையிலும், திருவேற்காடு நகர திமுக சார்பில் நகர செயலாளரும் நகர் மன்ற தலைவருமான என்.இ.கே. மூர்த்தி தலைமையிலும் ஏராளமான திமுகவினர் வரவேற்பு அளித்தனர்.

இதில் பூந்தமல்லி நகர்மன்ற தலைவர் காஞ்சனா சுதாகர், மாவட்ட பிரதிநிதி ஜெ.சுதாகர், மாநகர போக்குவரத்து கழக பொது மேலாளர்கள், உயர் அலுவலர்கள், நகராட்சி ஆணையர்கள் மற்றும் தொழிற் சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். ஆவடி காவல் ஆணையரக ஆணையாளர் கி.சங்கர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *