கரூர் பிரசார கூட்ட வழக்கு: மீண்டும் சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜரானார் விஜய்!!

சென்னை:
கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27-ந்தேதி அன்று மேற்கொண்ட பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான வழக்கை ஓய்வுபெற்ற சுப்ரீம்கோர்ட்டு நீதிபதி அஜஸ் ரத்தோகி கண்காணிப்பில் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.

இந்த வழக்கு தொடர்பாக த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் மற்றும் நிர்வாகிகள், சட்டம்- ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி.யாக இருந்த டேவிட்சன் தேவாசீர்வாதம் மற்றும் அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது.

விஜய்க்கும் சம்மன் அனுப்பி அவரிடமும் கடந்த 12-ந்தேதி அன்று சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.

டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் அன்றைய தினம் காலை 11.30 மணியளவில் ஆஜரான விஜய்யிடம் பல்வேறு கிடுக்கிப்பிடி கேள்விகளுடன் 6 மணி நேரத்துக்கு மேல் விசாரணை நடத்தப்பட்டது.

அவரிடம் அடுத்த நாளும் (அதாவது, 13-ந்தேதி) விசாரணை நடத்துவதற்கு சி.பி.ஐ. அதிகாரிகள் திட்டமிட்டிருந்தனர்.

ஆனால், பொங்கல் பண்டிகை காரணமாக விஜய் தரப்பில் விசாரணையை வேறு தேதிக்கு மாற்றும்படி சி.பி.ஐ. அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

அதனையேற்று, பொங்கல் பண்டிகை முடிந்தவுடன் 19-ந்தேதி மீண்டும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று சி.பி.ஐ. தரப்பில் சம்மன் வழங்கப்பட்டது. இதையடுத்து சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் நேற்று மாலை விஜய் டெல்லி புறப்பட்டு சென்றார்.

டெல்லி விமான நிலையத்தை இரவு 7.15 மணிக்கு விமானம் சென்றடைந்தது. பின்னர் கார் மூலமாக டெல்லி சர்தார் படேல் சாலையில் உள்ள நட்சத்திர விடுதிக்கு அவர் சென்றார். அங்கு அவர் இரவு தங்கினார்.

இந்தநிலையில் டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் விஜய் இன்று மீண்டும் விசாரணைக்காக ஆஜரானார்.

விசாரணைக்காக விஜய் ஆஜரான நிலையில் சி.பி.ஐ. தலைமை அலுவலகம், சிஜிஓ காம்பிளக்ஸ் சாலையில் பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *