வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஜன.30-ம் தேதி வரை அவகாசம் வழங்கிய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்!!

சென்னை:
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஜன.30-ம் தேதி வரை அவகாசம் வழங்கி தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் உத்தரவிட்டுள்ளார்.

தமிழக வாக்காளர் பட்டியலில் தகுதி இல்லாத வாக்காளர்களின் பெயர்களை நீக்கும் நோக்கில் கடந்த நவ.4-ம் தேதி எஸ்ஐஆர் பணிகள் தொடங்கின.

அதனடிப்படையில் கடந்த டிச.19-ம் தேதி அனைத்து மாவட்டங்களிலும், தொகுதி வாரியாக வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. கடந்த அக்.27-ம் தேதி நிலவரப்படி, தமிழகத்தில் 6.41 கோடி வாக்காளர்கள் இருந்த நிலையில், வரைவு வாக்காளர் பட்டியலில் 5.43 கோடி பேர் மட்டுமே இடம்பெற்றிருந்தனர்.

இறந்த வாக்காளர்கள் 26.95 லட்சம் பேர், நிரந்தரமாக இடம்பெயர்ந்தோர் மற்றும் குறிப்பிட்ட முகவரியில் வசிக்காத 66.44 லட்சம் பேர், இரட்டை பதிவு வாக்காளர்கள் 3.98 லட்சம் பேர் என மொத்தம் 97.37 லட்சம் பேரின் பெயர்கள் நீக்கப்பட்டன.

அதனைத் தொடர்ந்து டிச.19 முதல், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம் செய்யும் பணி நடைபெற்று வந்தது.

இதற்கு ஜன.18-ம் தேதி வரை அவகாசம் வழங்கப் பட்டிருந்தது. இதில் மொத்தம் 13 லட்சம் பேர் மட்டுமே, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பித்து இருந்தனர்.

இதற்கிடையே பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தொடர் விடுமுறை காரணமாக பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள் என்பதால், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சிகளும் தலைவர்களும் கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான அவகாசம் வரும் ஜன.30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த டிச.19-ம் தேதி வெளியிடப்பட்டது.

ஏற்புரைகள் மற்றும் மறுப்புரைகள் தாக்கல் செய்யும் காலம், அதாவது வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்க விண்ணப்பிக்கும் காலம் டிச.19 முதல் ஜன.18-ம் தேதி வரை வரை நிர்ணயிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, அனைத்து காரணிகளையும் கருத்தில் கொண்டு, வாக்காளர் பதிவு விதிகளின் கீழ் வழங்கப்பட்ட அதிகாரத்தை பயன்படுத்தி, தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பங்களை பெறும் பணி ஜன.30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் அனைவரும், இந்த நீட்டிக்கப்பட்ட காலக்கெடுவை பயன்படுத்தி, வாக்காளர் பட்டியல் தொடர்பான ஏற்புரைகள் மற்றும் மறுப்புரைகளை உரிய முறையில் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *