சென்னை:
“ஆளுநர் மீது ஒரு தவறான எண்ணத்தை உருவாக்க வேண்டும் என்ற அடிப்படையில்தான் திட்டமிட்டு முதல்வர் ஓர் அறிக்கையை தயார் செய்து சட்டப்பேரவையில் தீர்மானமாக வாசித்துள்ளார்” என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இக்கூட்டத்தொடர் தொடங்கிய சில நிமிடங்களிலேயே தமிழக அரசு தயாரித்த உரையை வாசிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி அவையிலிருந்து வெளிநடப்பு செய்தார்.
இதனைத் தொடர்ந்து ஆளுநரின் உரையை சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு வாசித்தார்.
இந்தச் சூழலில், அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்களும் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, “சட்டப்பேரவையிலிருந்து தமிழக அரசின் உரையை வாசிக்காமல் வெளிநடப்பு செய்ததற்கான காரணங்களை ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ளது.
அதிமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு பேணிக் காக்கப்பட்டது. சட்டத்தின் ஆட்சி நடைபெற்றது.
கடந்த நான்கரை ஆண்டு கால திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்கெட்டுவிட்டது. எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமைகள் நடக்காத நாளே இல்லை.
தமிழகம் போதைப்பொருள் நிறைந்த மாநிலமாக மாறிவிட்டது. நாங்கள் பலமுறை போதைப்பொருள்களை ஒழிக்க வேண்டும் என வலியுறுத்தியும் இந்த அரசு செவிசாய்க்கவில்லை.
இதனால் இன்று இளைஞர்கள், மாணவர்கள் போதைக்கு அடிமையாகி கடும் குற்றச்செயல்களில் ஈடுபடுகின்றனர். இப்படிப்பட்ட மோசமான திமுக ஆட்சி அகற்றப்பட வேண்டும், முதல்வர் ஸ்டாலின் ராஜினமா செய்ய வேண்டும் என வலியுறுத்தி நாங்கள் வெளிநடப்பு செய்துள்ளோம்.
இந்தியாவிலேயே சூப்பர் முதல்வர் என்று ஸ்டாலின் தன்னைத்தானே சொல்லிக்கொள்கிறார். இன்று தமிழகத்தின் நிலையை ஆளுநர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
அமைச்சரவை தயாரித்த உரையை ஆளுநர் வாசிக்க வேண்டுமென சபாநாயகர் சொல்கிறார். ஆனால், உரையில் உள்ள தவறுகளை ஆளுநர் சுட்டிக்காட்டுகிறார்.
தவறான செய்தியை வாசிக்க மாட்டேன் என ஆளுநர் சொல்கிறார், அவருடைய நியாயம் அதுதான். உரையில் உண்மைத்தன்மை இருந்தால்தான் வாசிக்க முடியும். தவறு இருப்பதால் சுட்டிக்காட்டுகிறார். இதனை இந்த அரசு ஏற்றுக்கொள்ள மறுக்கிறது.
ஆளுநர் பற்றி என்ன செய்தி சொல்லவேண்டுமோ, அதனை முன்கூட்டியே தயாரித்து வந்து, சட்டப்பேரவையில் தீர்மானமாக கொண்டு வருகிறார் முதல்வர். எப்படி ஆளுநர் இப்படி நடந்துகொள்வார் என்பது முதல்வருக்கு தெரியும்.
ஆக திட்டமிட்டு இந்த அரசாங்கம் ஆளுநர் மீது ஒரு தவறான எண்ணத்தை உருவாக்கவேண்டும் என்ற அடிப்படையில்தான் முதல்வர் ஒரு அறிக்கையை தயார் செய்து சட்டப்பேரவையில் தீர்மானமாக கொண்டு வந்துள்ளனர்.
ஆளுநர் உரையில் வேறு யாரும் கருத்து சொல்ல முடியாது. மரபுப்படி ஆளுநர் உரையில், ஆளுநர் உரை மட்டுமே இடம்பெற வேண்டும். ஆனால், முதல்வர் தனது கருத்துக்களை இதில் பதிவு செய்கிறார். இது எந்த வகையில் நியாயம்.
தேசிய கீதம் பாடப்படவில்லை என்ற ஆளுநரின் குற்றச்சாட்டு குறித்து நான் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. மக்களின் பிரச்சினைகளை மட்டுமே இங்கு பேச வந்துள்ளோம்” என்றார்