கர்நாடக சட்டப்பேரவையின் கூட்டுக் கூட்டத்தில் ஆளுநர் உரையை, ஆளுநர் தாவர்சந்த் கெலாட் முழுமையாக வாசிக்காமல் வெளியேறியதால் அமளி !!

பெங்களூரு:
கர்நாடக சட்டப்பேரவையின் கூட்டுக் கூட்டத்தில் ஆளுநர் உரையை, ஆளுநர் தாவர்சந்த் கெலாட் முழுமையாக வாசிக்காமல் வெளியேறியதால் அமளி ஏற்பட்டது.

ஆண்டின் முதல் கூட்டத் தொடர் தொடங்குவதை முன்னிட்டு கர்நாடக சட்டப்பேரவையின் கூட்டுக் கூட்டத்தில் ஆளுநர் தாவர்சந்த் கெலாட் இன்று உரை நிகழ்த்துவதாக இருந்தது.

சட்டப்பேரவை கூட்டுக்கூட்டம் கூடியதும், ஆளுநர் உரையின் முதல் மற்றும் இறுதி வரிகளை மட்டுமே வாசித்துவிட்டு ஆளுநர் தாவர்சந்த் கெலாட் சட்டப்பேரவையில் இருந்து வெளியேறினார்.

அப்போது, ஆளுநரை தடுத்து நிறுத்திய காங்கிரஸ் மூத்த தலைவர் ஹரிபிரசாத், உரையை முழுமையாக வாசிக்குமாறு கேட்டுக்கொண்டார். எனினும், அந்த கோரிக்கையை ஏற்க ஆளுநர் மறுத்துவிட்டார்.

இதையடுத்து, காங்கிரஸ் எம்எல்ஏக்களும் எம்எல்சிக்களும் ஆளுநரின் செயலைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். இந்த சம்பவம் குறித்துப் பேசிய கர்நாடக அமைச்சர் பிரியங்க் கார்கே, ‘‘சட்டப்பிரிவு 176 மற்றும் 163 ஆகியவற்றை மீறியது யார்? ஆளுநர் உரையில் நாங்கள் கூறி இருந்த அனைத்தும் உண்மைகளே.

அதில் ஒரு பொய்கூட இல்லை. இருந்தும் ஆளுநர் அதை வாசிக்கவில்லை. ஆளுநர் அலுவலகம் பாஜக அலுவலகமாகிவிட்டதா?

ஆளுநர் உரையை ஆளுநர் வாசிப்பது அரசியலமைப்புக் கடமை. அவர் ஏன் அதில் இருந்து பின்வாங்குகிறார் என்று எனக்குத் தெரியவில்லை. ஒரு பத்தி பொய்யாகவோ அல்லது கற்பனையாகவோ இருந்தால் கூட, அதை வாசிக்க வேண்டாம்.

ஆளுநர் உரையின் 11 பத்திகளும் ஏற்கனவே பொதுவெளியில் விவாதிக்கப்பட்டு வருகின்றன.

அதே பத்திகள், பிரதமர், நிதி அமைச்சர், ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

இதில் என்ன தவறு இருக்கிறது? ஆளுநருக்கு கர்நாடக மக்கள் மீது அக்கறை இல்லை என்றால், அவர் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம்’’ என்று கூறினார்.

இந்த சம்பவம் குறித்துப் பேசிய முதல்வர் சித்தராமையா, ‘‘ஆண்டின் முதல் கூட்டத் தொடரில் அமைச்சரவையால் தயாரிக்கப்பட்ட உரையை சட்டமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் ஆளுநர் வாசிக்க வேண்டும்.

இது ஒரு அரசியலமைப்புத் தேவை. அமைச்சரவையால் தயாரிக்கப்பட்ட உரையைப் படிப்பதற்குப் பதிலாக ஆளுநர் தானே தயாரித்த உரையைப் படித்தார். இது இந்திய அரசியலமைப்பை மீறுவதாகும்.

இது இந்திய அரசியலமைப்பின் 176 மற்றும் 163 ஆகிய சரத்துக்களை மீறுவதாகும். அவர் தனது அரசியலமைப்புக் கடமைகளை நிறைவேற்றவில்லை.

எனவே, ஆளுநருக்கு எதிராக நாங்கள் போராட்டம் நடத்தப் போகிறோம். மேலும், உச்ச நீதிமன்றத்தை அணுகுவதா வேண்டாமா என்பது குறித்து நாங்கள் ஆராய்ந்து வருகிறோம்’’ என தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் ஆர்.என். ரவி, ஆளுநர் உரையை வாசிக்காமல் புறக்கணித்த நிலையில், கர்நாடக சட்டப்பேரவையிலும் ஆளுநர் தனது உரையை வாசிக்க மறுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *