கடலூர்:
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி யின் முன்னாள் தலைவர் கே.எஸ்.அழகிரியின் மனைவி வத்சலா கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல்நலக் குறைவால் கால மானார்.
இதையொட்டி சிதம்பரம் அருகே கீரப்பாளையத்தில் உள்ள அழகிரி இல்லத்தில் நடந்த படத்திறப்பு விழாவில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் தொகுதி எம்.பியுமான திருமாவளவன் பங்கேற்றார்.
அப்போது அவர் பேசியதாவது: தற்போது நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலில் நாம் அனைவரும் சிந்தித்து நிதானமான முடிவை எடுத்து களப்பணியாற்றும் நிலையில் இருக்கிறோம்.
திமுக, காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள் உள்ளிட்ட கூட்டணி இந்தியாவுக்கே ஒரு முன் மாதிரியான கூட்டணியாக இருக்கிறது. இதுபோன்ற கூட்டணி இந்தியாவில் எந்த மாநிலத்திலும் அமையவில்லை. அமையும் வாய்ப்பும் இல்லை.
2017-ல் இருந்து கடந்த 9 ஆண்டுகளாக இந்த கூட்டணி, சின்ன சின்ன கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் ஒரு கட்டுக்கோப்பாக இயங்கி வருகிறது.
வெற்றி பெற்றிருக்கிறது. இதை பொறுத்துக்கொள்ள முடியாத சிலர் இந்த கூட்டணியை பலவீனப்படுத்த வேண்டும், சிதறடித்து விட வேண்டும் என்று எண்ணி பல்வேறு சதி முயற்சிகளை மேற்கொண்டு இருக்கிறார்கள். அந்த கும்பலுக்கு நாம் சரியான பாடத்தை புகட்ட வேண்டும்.
தமிழ்நாடு ஒரு மாறுபட்ட மண் என்பதை நாம் சனாதன சக்திகளுக்கு உணர்த்தியாக வேண்டும். அதற்கு இந்தக் கூட்டணி கட்டுக்கோப்பாக இருக்க வேண்டும்.
இந்திரா காந்தி மிசா சட்டம் கொண்டு வந்தபோது காங்கிரஸை எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்தன. அடுத்து வந்த தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்தது.
கடும் எதிர்ப்பு இருந்த நேரத்திலும் அரசியலமைப்பு சட்டத்தை திருத்தி செக்யூலர், சோஷலிஸ்ட் என்ற இரு வார்த்தைகளை புகுத்தி சாதனை புரிந்தவர் இந்திராகாந்தி. இவைகள் தான் இன்றைக்கு சனாதன சக்திகளை உலுக்கிக் கொண்டிருக்கிறது.
அதன் பிறகு வந்த ராஜீவ்காந்தி, ராகுல் காந்தி போன்ற தலைவர்கள் அனைவரும் அதில் உறுதியாக இருந்தார்கள்.
இந்த ஒரு காரணத்திற்காகவே விசிக காங்கிரஸூடன் இருக்கிறது. தமிழ்நாட்டை இன்றைக்கு சூழ்ந்து இருக்கின்ற பேராபத்தை முறியடிக்கும் முக்கியமான பாத்திரத்தை வகிக்க வேண்டிய கட்டத்தில் காங்கிரஸ் கட்சி இருக்கிறது.
திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் உள்ள இந்த கூட்டணி இந்திய அளவில் திரும்பிப் பார்க்க வைக்கச் கூடிய அளவுக்கு ராகுல்காந்திக்கு உற்றத் துணையாக இருக்கின்ற கூட்டணி.
காங்கிரஸில் இருப்பவர்கள், காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்து சென்று கட்சி ஆரம்பித்த தலைவர்கள் கூட சொல்லத் தயங்கியபோது இந்தியாவின் அடுத்த பிரதமர் ராகுல்காந்தி தான் என்று பிரகடனப்படுத்தியவர் மு.க.ஸ்டாலின்.
ராகுல்காந்தி பிரதமர் ஆனால்தான் மதச்சார்பின்மையை காப்பாற்ற முடியும். அரசமைப்பு சட்டத்தை காப்பாற்ற முடியும்.
சனாதன சக்திகளிடமிருந்து இந்த தேசத்தை காப்பாற்ற முடியும் என்ற நம்பிக்கை மற்ற மாநிலங்களில் இருக்கிறதோ, இல்லையோ தமிழ்நாட்டில் இருக்கிறது. அதற்கு காரணம் ஸ்டாலின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி.
இந்தக் கூட்டணியை பலவீனப்படுத்த என்ன சதிகள் செய்தாலும் அவற்றையெல்லாம் முறியடித்து நாம் உறுதிப்பாட்டோடு களத்தில் நிற்க வேண்டும்.
காங்கிரஸ் அங்கம் வகிக்கும் இந்த கூட்டணி கட்டுக்கோப்பாக இருக்க வேண்டியது காலத்தின் தேவை என்பதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தோழமையோடு சுட்டிக்காட்டுகிறது என்றார்.