சென்னை:
“அதிமுக-வால் 3 முறை முதல்வரான ஓபிஎஸ் தன்னை வாழவைத்த கட்சிக்கு நன்றிக்கடன்செலுத்த வேண்டிய நேரம் வந்து விட்டது” என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் தெரிவித்தார்.
இதுகுறித்து தேனி அருகே ஊஞ்சாம்பட்டியில் உள்ள தனது இல்லத்தில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் மேலும் கூறியதாவது:
அதிமுக-வால் 3 முறை முதல்வரான ஓபிஎஸ் இந்த இயக்கத்துக்கு நன்றிக்கடன் செலுத்தும் நேரம் வந்து விட்டது. தமிழகத்தில் நல்லாட்சி ஏற்பட ஓரணியில் இணைய வேண்டும் என அழைப்பு விடுக்கிறேன். அவரும் நல்ல முடிவை எடுப்பார் என நம்புகிறேன்.
எம்ஜிஆர் படத்தை வைத்துக் கொண்டு அதிமுக-வை ஊழல் கட்சி என விஜய்கூறுவது தவறு. நாங்கள் எல்லாம் வெகுண்டெழுந்தால் தப்பாகப் போய்விடும்.
அண்ணன் பழனிசாமியின் தலைமையை ஏற்று தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துள்ளோம். மிரட்டியோ, அழுத்தம் கொடுத்தோ நாங்கள் கூட்டணியில் இணையவில்லை.
ஊழல் என்றால் நினைவுக்கு வருவது திமுக தான். போதை மருந்து கடத்தலில் தமிழ்நாடு முதல் மாநிலமாக மாறி வருகிறது.
அம்மா உணவகம், தாலிக்குத் தங்கம், லேப்டாப் என ஜெயலலிதா கொண்டு வந்த அனைத்து திட்டத்தையும் திமுக நிறுத்தியது.
எங்களுக்குள் இருந்தது குடும்பச் சண்டையே. நாங்கள் அன்றே ஒன்று சேர்ந்து இருந்தால் திமுக வெற்றி பெற்று இருக்காது.
அம்மாவின் ஆட்சி மலர்வதற்காகவே நாங்கள் ஒன்றிணைந்து பிரச்சாரம்செய்வோம். ஜெயலலிதாவின் உண்மைத் தொண்டரான ஓபிஎஸ் எங்கள் கூட்டணிக்கு வருவார்.
அவர் மட்டும் தர்ம யுத்தத்தை தொடங்காமல் இருந்தால் சசிகலா தலைமையில் மீண்டும் முதல்வராக வந்திருப்பார்.
அதிமுக-வால் 3 முறைமுதல்வரான ஓபிஎஸ் தன்னை வாழவைத்த கட்சிக்கு நன்றிக்கடன் செலுத்த வேண்டிய நேரம் வந்து விட்டது.
தமிழகத்தில் நல்லாட்சி ஏற்பட எங்கள் கூட்டணியில் அவர் இணைய வேண்டும். இத்தேர்தலில் தமிழ்நாட்டுக்கு உண்மையான விடியல் வர உள்ளது.
விஜய்யால் தனது படத்துக்கான டிக்கெட்டை பிளாக்கில் விற்பதையே தடுக்கமுடியவில்லை.
இவர் எப்படி தமிழகத்தில் ஊழலை ஒழிப்பார்? முதலில் அவர்வீட்டை விட்டு வெளியே வந்து அரசியல் செய்யட்டும். நாட்டின் முதன்மைமாநிலமாக தமிழ்நாட்டை மோடி மாற்றுவார்.
வரும் சட்டமன்றத் தேர்தலில் நான் போட்டியிடப் போவதில்லை. என்னுடன் இருப்பவர்களை வெற்றி பெறச்செய்து சட்டப்பேரவைக்கு அனுப்பவேண்டும்.
அதோடு அவர்களை அமைச்சராகப் பார்க்க வேண்டும் என்ற ஆசையும் இருக்கிறது. அதற்காக கூட்டணியில் அழுத்தம் தர மாட்டேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.