நாமக்கல்:
ஜல்லிக்கட்டு போட்டிகளில் எதிர்பராத விதமாக காளைகள் முட்டி உயிரிழக்க நேரும் வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளார்.
நாமக்கல் அருகே சாலப்பாளையம் கிராமத்தில் இன்று அதிமுக சார்பில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்துப் பேசியதாவது:
அதிமுக ஆட்சி அமைந்தவுடன் ஜல்லிக்கட்டு போட்டியின்போது ஏதேச்சையாக காளைகள் முட்டி வீர்கள் உயிரிழக்க நேரிட்டால் அவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் நிதி உதவி அளிக்கப்படும்.
ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க பதிவு செய்யும் வீரர்களுக்கு இன்ஸ்சூரன்ஸ் செய்யப்படும். மேலும், ஜல்லிக்கட்டு காளைகளும் கணக்கிட்டு இன்சூரன்ஸ் செய்யப்படும்.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார். தொடர்ந்து நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 400க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் தனித்தனி குழுக்களாக பிரிக்கப்பட்டு களத்தில் இறக்கப்பட்டனர்.
அவர்கள் வாடி வாசல் வழியாக சீறிப்பாய்ந்து வந்த காளைகளை தாவிப்பிடித்து அடக்கினர்.
மாடுகளை அடக்கிய வீரர்கள் மற்றும் மாடுபிடி வீரர்களின் பிடியில் சிக்காமல் சென்ற காளைகளுக்கு விழாக்குழவினர் சார்பில் சைக்கிள், கட்டில் மெத்தை உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன.
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பி.தங்கமணி, வெ.சரோஜா, விஜயபாஸ்கர், முன்னாள் எம்எல்ஏகள் பாஸ்கர், சந்திரசேகர் உள்பட பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.