நாமக்கல்:
“கரூர் சம்பவத்தை வைத்து பாஜக இன்புளூயன்ஸ் செய்கிறதோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது” என தவெக கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் அருண்ராஜ் தெரிவித்தார்.
திருச்செங்கோடு கருவேப்பம்பட்டியில் நேற்று இரவு டென்னிஸ் பால் டர்ப் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதில் பங்கேற்ற தவெக கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் அருண்ராஜ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது: கரூர் சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை நடைபெற்று வரும் நிலையில் இதுதொடர்பாக பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பேசியிருப்பது அவர்கள் இந்த விவகாரத்தில் இன்புளுயன்ஸ் செய்கிறார்களோ என்ற எண்ணத்தை ஏற்படுத்தி உள்ளது.
அதேவேளையில் மிரட்ட முயற்சிக்கிறார்கள் எனவும் கருதலாம். தவெகவுக்கும், திமுகவுக்கும் தான் போட்டி நிலவுகிறது. களத்தில் உள்ளவர்களோடுதான் நாங்கள் போட்டியிட முடியும்.
களத்தில் இல்லாதவர்கள் (அதிமுக ஐடி விங் அறிக்கை தொடர்பாக) சொல்வது பற்றி கவலை இல்லை.
அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், விஜய் குறித்து முன்பு என்ன பேசினார். இப்போது என்ன பேசுகிறார் என்பதை எல்லாம் ஊடகங்கள்தான் பார்க்க வேண்டும்.
சட்டப்பேரவையில் செல்வப்பெருந்தகை ‘விசில் சத்தம் பறக்கிறது எனக் கூறுகிறாரே, கூட்டணிக்கு வருகிற சிக்னல் என்று எடுத்துக் கொள்ளலாமா?’ என்ற கேள்விக்கு ‘பொறுத்திருந்து பாருங்கள்’ எனக் கூறினார்.
‘திருச்சி காங்கிரஸில் இருந்து தலைவர்கள் பலர் தவெகவில் இணைய உள்ளதாக செய்திகள் பரவுகிறதே’ என்ற கேள்விக்கு, ‘இணைந்தால் நல்லது தான். உங்களுக்கு தெரியாமல் நடக்கவா போகிறது.
நடக்கும்போது பார்த்துக் கொள்ளலாம்’ என்றார். திரைப்பட நடிகர் ஸ்ரீநாத் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.