சாத்தூர்:
இதுவரை அண்ணி, இனிமேல் அம்மா என்று சாத்தூரில் நடைபெற்ற பிரச்சாரத்தில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா உருக்கமாகப் பேசினார்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் தேமுதிக சார்பில் “உள்ளம் தேடி இல்லம் நாடி” பிரச்சாரப் பயணம் நேற்று முன்தினம் மாலை நடைபெற்றது.
கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா, விஜயபிரபாகரன் இருவரும் சாத்தூர் முக்குராந்தல் பகுதியில் ரத யாத்திரை வாகனத்தில் நின்று பொதுமக்களிடையே பேசினர்.
அப்போது, விஜயபிரபாகரன் பேசுகையில், “2024-ல் இல்லை என் றாலும் 2026 உள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் அனைத்துத் தொகுதி யிலும் வேட்பாளராக நிற்க கோரி மக்களின் ஆதரவு வந்து கொண்டி ருக்கிறது. இதுகுறித்து விரைவில் முடிவு தெரியும்” என்று கூறினார்.
பொதுச் செயலாளர் பிரேமலதா பேசுகையில், கடந்த மக்களவைத் தேர்தலில் விஜயபிரபாகரனுக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி. அந்தத் தேர்தலில் விஜயபிரபாகரன்தான் வெற்றிபெற்றார். ஆனால், வேறு ஒருவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த தேமுதிக மாநாடு வெற்றி மாநாடு. கேப்டன் மேல் உள்ள பற்றால் அனைவரும் எதிர்பார்ப்பில்லாமல் மாநாட்டுக்கு வந்தனர்.
ஆனால், மற்றவர்கள் புடவை, சோறு, மோர், பீர் கொடுத்து கூட்டத்தைக் கூட்டுகின்றனர். எங்கு சென்றாலும் யாருடன் கூட்டணி என்ற ஒரே கேள்வியாக இருக்கிறது. மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தி அதிகாரப்பூர்வமாக நல்ல முடிவை தலைமை அறிவிக்கும்.
அதற்குப்பின் தேர்தல் பணிகளைத் தொடங்குவோம். இன்னும் ஒரு மாத காலம் இருக்கிறது. தேமுதிக வெற்றி பெற்றால் சாத்தூர் பகுதியைச் சுற்றியுள்ள கிராமங்களுக்கு விவசாயத்துக்கும் குடிநீருக்கும் பற்றாக்குறையின்றி வழிவகை செய்யப்படும். வைப்பாற்றில் கழிவுநீர் கலப்பது தடுக்கப் படும். வெம்பக்கோட்டை, ஏழாயிரம் பண்ணை பகுதியில் பட்டாசு தொழில் பாதுகாக்கப்படும்.
பேருந்து நிலையம் மற்றும் பள்ளி அருகே உள்ள அரசு மதுபானக் கடைகளை அகற்ற கோரிக்கை வைப்போம். உள்ளூர் வாகனங்களுக்கு எட்டூர்வட்டம் சுங்கச்சாவடியில் பணம் வசூலிப்பது கண்டனத்துக்குரியது.
இதுவரை நான் உங்களுக்கு எல்லாம் அண்ணி, இனிமேல் அம்மா. என்று உருக்கமாகப் பேசினார். முன்னதாக, பேருந்து நிலையம் அருகில் உள்ள காமராஜர் சிலைக்கும், கிருஷ்ணன்கோவில் அருகே உள்ள தேவர் சிலைக்கும் பிரேமலதா, விஜயபிரபாகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.